

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை கிளையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் காணொலி மூலமாக திறந்து வைத்தார்.
நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு காண்பதற்காக ‘கம்பெனிகள் சட்டம் - 2013’ பிரகாரம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் (என்சிஎல்டி) நாடு முழுவதும் கடந்த 2016-ல் தொடங்கப்பட்டன. இதன் 16 அமர்வுகள் தற்போது நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்த தீர்ப்பாயங்கள் பிறப்பிக்கும் தீர்ப்புகளை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (என்சிஎல்ஏடி) மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும். இந்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கிளையை தென் மாநிலங்களுக்கு மையமாக சென்னையில் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பலனாக தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கிளை சென்னையில் கடந்தாண்டு மார்ச் 18 முதல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி சென்னை எழிலகத்தில் இதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. ஆனால் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாத நிலையில் திறப்பு விழா பாதியில் நின்றது.
இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை கிளையை கடந்த திங்களன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் செயல் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பன்ஷி லால் பட் மற்றும் சென்னை கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வேணுகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நவீன்குமார் மூர்த்தி கூறும்போது, “தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கிளையை உடனடியாக சென்னையில் திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர் மோகன்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் நான் ஆஜராகி வாதிட்டேன். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசு 4 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்த நிலையில் தற்போது இந்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உடனடியாக திறக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயம் சென்னையில் திறக்கப்பட்டு இருப்பது எங்களைப்போன்ற வழக்கறிஞர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.