Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

புதிய கரோனாவுக்கு எதிராக செயல்படும் கோவேக்ஸின்: ஐசிஎம்ஆர் ஆய்வில் உறுதியானது

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை உருமாறிய கரோனா தொ ற்றுக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செயல்படுவதை ஐசிஎம்ஆர் ஆய்வு உறுதி செய்துள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ம் தேதி தொடங்கப்பட்டது. ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் மற்றும் புனே நகரில் சீரம் நிறுவனத்தில் தயாராகியுள்ள இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையதின் கோவிஷீல்டு ஆகிய ஆகிய 2 தடுப்பு மருந்துகளைக் கொண்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகத்தில் 9 பேர் உட்பட இந்தியா முழுவதும் சுமார் 100 பேர் வரை புதிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் கோவேக்ஸின் தடுப்பு மருந்து, புதிய கரோனா தொற்றுக்கு எதிராக செயல்பட்டு பலன் அளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், பெரிய அளவில் நம்பிக்கை ஏற்படவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசியை அதிகமானோர் போட்டுக் கொள்கின்றனர். கோவேக்ஸின் தடுப்பூசியை போட்டுக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்), புதிய கரோனா தொற்றுக்கு எதிராக கோவேக்ஸின் செயல்படுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

தற்போது ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிவிப்பில், “கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கரோனா தொற்றுக்கான எதிர்ப்பாற்றல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 99.6 சதவீதம் புதிய கரோனா தொற்றுக்கு எதிராக செயல்பட்டு அதனை அழிக்கும் ஆற்றல் கோவேக்ஸின் தடுப்பு மருந்துக்கு இருப்பது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

பழைய கரோனா தொற்று, புதிய கரோனா தொற்றுக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பு மருந்து செயல்படும் என்று ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி மூலம் உறுதி செய்துள்ளதால், கோவேக்ஸின் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x