எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தை தூர்வார விவசாயிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை
எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தை தூர்வாரும் பொறுப்பை விவசாய சங்கத்திடம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கழுகுமலை, கடம்பூர் ஆகியபகுதிகளில் பெய்யும் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக எப்பொதும்வென்றான், ஆதனூர் வழியாக வேப்பலோடை அருகே கடலில் கலந்து வந்தது. வீணாக கடலில்கலக்கும் தண்ணீரை வானம்பார்த்த பூமியான எப்போதும்வென்றான் பகுதி மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில்நீர்த்தேக்கம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, கடந்த 30.6.1976-ம் ஆண்டு4 மீட்டர் உயரமும், 2,670 மீட்டர் நீளமும் கொண்ட எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.
இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 3.53 மில்லியன் கன அடியாகும். 642.87 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நீர்த்தேகத்தில் இரண்டு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீர்த்தேக்கம் மூலம் எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 1,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. சுமார் 15 ஆண்டுகள் முன்பு வரை விவசாயிகள் 2 போகம் மகசூல் எடுத்து வந்தனர்.
நீர்த்தேக்கத்தை தூர்வாராததால் மண் மேடாகியது. தற்போது சுமார் 2 மீட்டர் உயரம் வரை மட்டுமே நீரைத் தேக்க முடிகிறது. இந்தாண்டு கடந்த வாரம் வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால், பல லட்சம் கன அடி தண்ணீர் வீணாக சென்று கடலில் கலந்தது. எனவே, எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தில் முறையாக தூர்வாரும் பணி மேற்கொண்டு, மதகுகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர்.
எப்போதும்வென்றான் பகுதி விவசாயிகள் சங்க உறுப்பினர் க.திருமணி காமராஜ் கூறும்போது, எப்போதும்வென்றான், கழுகாசலபுரம், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர் ஆகிய பகுதிகளில் நெற்பயிர்தான் பிரதானமாக பயிரிட்டு வருகிறோம். சில இடங்களில் தோட்டப்பாசனமும், மானாவாரியும் உள்ளது. நீர்த்தேக்கம் அமைக்கப்படுவதற்கு முன் இப்பகுதி முழுவதுமே மானாவாரி நிலங்கள் தான்.
எப்போதும்வென்றான் நீர்த்தேக்கம் மண்மேடாகி சுமார் 2 மீட்டர்அளவு தான் தண்ணீர் தேக்க முடியும்என்ற நிலை உருவாகி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ரூ.89 லட்சத்தில் நீர்த்தேக்கத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கரையோரம் மட்டும் மண்ணை அள்ளி போட்டனர். காற்றாற்றின் இருபுறமும் ஒரு கி.மீ. தூரம் கற்கள் பதிக்க வேண்டும். ஆனால், அப்போது சுமார் 20 மீட்டர் வரையே கற்கள் பதித்தனர். அதன் பின்னர் கடந்த ஆண்டு குடிமராமத்து பணிகள் நடந்தது. ஆனால், மழை தொடங்கியதால் அப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டன. இதற்கிடையே, கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழையில், நீர்த்தேக்கத்தின் பிரதான மதகு அருகே உள்ள சுவர் உடைந்துவிட்டது.
இப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தை தூர்வாரும் பொறுப்பை விவசாயிகள் வசம் ஒப்படைக்க வேண்டும். விவசாயிகளுக்கு கரம்பை மண் தேவைப்படுகிறது. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் நீர்த்தேக்கத்தின் உட்பகுதியில் உள்ள கரம்பை மண் அள்ளினால் செலவு மிச்சமாகும். நீர்த்தேக்கமும் ஆழப்படுத்தப்படும். தனித்தனியாக ஒவ்வொருவரும் அனுமதி பெற்று கரம்பை மண்அள்ளுவதில் சிரமங்கள் உள்ளன. எனவே, விவசாய சங்கத்திடம் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கத்தை தூர்வாரும் பணியை ஒப்படைக்க வேண்டும், என்றார் அவர்.
எப்போதும்வென்றானைச் சேர்ந்த விவசாயி சி.காந்திகூறுகையில், எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தில் முட்செடிகள், வேலி கருவை மரங்கள் அகற்றினர். கரையை சுரண்டிவிட்டு, புதிதாக போட்டது போல் பாலீஸ் செய்துவிட்டனர். இப்போது ஒரு மழைக்கே நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்ந்து விடுகிறது, என்றார்.
