

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் எதிரி வீராசாமி, கோவை மகளிர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டி.இ.எல்.சி. விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இரு சிறுமிகள் கத்தி முனையில் கடத்திச் செல்லப் பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய பொள்ளாச்சி போலீஸார், வீராசாமி (23) என்பவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்னர், அவர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு வீராசாமி பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டு நீதிபதி எம்.பி. சுப்பிரமணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து அவரை வரும் ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு வீராசாமி அழைத்துச் செல்லப்பட்டார்.
இது குறித்து கோவை மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஆர்.சரோஜினி கூறுகையில், மாவட்டத் தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இங்கு மட்டுமே விசாரிக்கப்படும்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானபோது வீராசாமி, பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், சட்ட விதிகளின்படி வழக்கு நடைபெறும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றார்.