

மானாமதுரை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர வழிப்பறியைத் தடுத்த மானாமதுரை டிஎஸ்பியைப் பாராட்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி சான்றிதழ் வழங்கினார்.
மானாமதுரை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கையில் இருந்து மானாமதுரைக்கு வாகனங்களில் செல்வோரிடம் அடிக்கடி வழிப்பறி நடந்து வந்தது. இதனால் அச்சாலையில் பயணிக்க வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இதையடுத்து அச்சாலையில் நள்ளிரவு வரை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் மானாமதுரை டிஎஸ்பி சுந்தர மாணிக்கம் நடவடிக்கை எடுத்தார். இதனால் வழிப்பறி தடுக்கப்பட்டு, வாகனங்களில் செல்வோர் நிம்மதியாகச் சென்று வருகின்றனர். டிஎஸ்பி சுந்தர மாணிக்கம் பொறுப்பேற்றதில் இருந்து மானாமதுரை துணைக் கோட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையும் குறைந்துள்ளது.
மேலும், தேவர் குருபூஜை பாதுகாப்புப் பணி, குற்ற வழக்குகளில் உடனுக்குடன் குற்றவாளிகளைக் கைது செய்தது போன்றவற்றிலும் டிஎஸ்பி சிறப்பாகச் செயல்பட்டார். இதையடுத்து டிஎஸ்பி சுந்தர மாணிக்கத்துக்கு மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.