காளையார்கோவில் அருகே ஷிப்ட் முறையில் மின்வெட்டு: 30 கிராமங்களில் மக்கள்; விவசாயிகள் சிரமம்

காளையார்கோவில் அருகே ஷிப்ட் முறையில் மின்வெட்டு: 30 கிராமங்களில் மக்கள்; விவசாயிகள் சிரமம்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 30 கிராமங்களில் ஷிப்ட் முறையில் மின்வெட்டால் விவசாயிகள், கிராம மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

காளையார்கோவில் அருகே மறவமங்கலம் துணை மின்நிலையம் மூலம் ஏரியவயல், மாதவநகர், சாத்தரசன்கோட்டை, மறவமங்கலம், சிலுக்கப்பட்டி, வலையம்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது.

ஏற்கெனவே இப்பகுதிகளில் குறை மின்னழுத்த மின்சாரமே விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக அப்பகுதிகளில் அதிகாலை 5 முதல் காலை 9 மணி வரை, மாலை 3 முதல் 6 மணி வரை ஷிப்ட் முறையில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

காலை, மாலை முக்கிய நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் பம்புசெட் மோட்டார்களை இயக்க முடியாததால் விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மறவமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில், ''மறவமங்கலம் சுத்திகரிப்பு நிலையத்தில் காலை, மாலை இருவேளைகளிலும் குடிநீர் பிடிப்போம். தற்போது மின்வெட்டால் குடிநீர் பிடிக்க முடியவில்லை. கடை வியாபாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலை நேர மின்வெட்டால் வேலைகளுக்குச் செல்ல முடியவில்லை'' என்று கூறினர்.

இதுகுறித்து மின்வாரியத்துறையினர் கூறுகையில், ''விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அவ்வப்போது விவசாயத்திற்கான மின்சாரத்தை நிறுத்த ஒருமுனையை நிறுத்துகிறோம். அந்த ஒருமுனைக்கான இணைப்பில் குடியிருப்புகளும் இருப்பதால் சிக்கல் ஏற்படுகிறது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்குத் தெரிவித்துவிட்டோம்'' என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in