

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 95.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநர் கே.ரோசய்யா:
வைகோவின் தாயார் மாரியம்மாளின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் வைகோவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா:
வைகோவின் தாயார் மறைவு செய்தியறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். ஈடு செய்ய முடியாத இந்த இழப்பை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் வைகோவுக்கு அளிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
கருணாநிதி (திமுக தலைவர்):
மதிமுக பொதுச் செயலாளர், வைகோவின் தாயார், மாரியம்மாள், தனது 96 வயதில், இயற்கை எய்தினார் என்ற செய்தியினை அறிந்து பெரிதும் வருந்துகிறேன்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் கலிங்கப்பட்டி வைகோ இல்லத்திற்குச் சென்றிருந்த போது, என்னைத் தாயுள்ளத்தோடு வரவேற்று மகிழ்ந்தது எனக்கு இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
எனது அன்னையாரைப் போலவே வைகோவின் அன்னையாரும் அன்றாட அரசியலைப் புரிந்து கொண்டு வாழ்ந்தவர். குறிப்பாக வைகோவின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும், ஆதரவாகவும், அரவணைப்பாகவும், ஆலோசனை வழங்குபவராகவும் விளங்கியவர் அன்னை மாரியம்மாள்.
அவரது மறைவினால் வாடும் வைகோ, மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்):
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவால் பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பாரம்பரியமிக்க குடும்பத்தின் தலைவியாக திகழ்ந்த மாரியம்மாள் தனது மகன்களின் பொதுவாழ்க்கைக்கு துணையாக இருந்தார்.
கலிங்கப்பட்டி பகுதியில் அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படுபவராகவும், அனைத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் மரியாதைக்குரியவராகவும் திகழ்ந்தவர். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களில் பெரும்பான்மையானோர் நெல்லை மாவட்டத்திற்கு செல்லும் போது அவரை சந்தித்து வாழ்த்து பெறுவது இயல்பாகும்.
தாயார் மாரியம்மாளின் மறைவு நண்பர் வைகோவுக்கும், அவரது குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். தாயாரை இழந்து வாரும் வைகோவுக்கும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மதிமுகவினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்):
மறைந்த மாரியம்மாள் வைகோவுக்கு அன்னையாக மட்டுமல்ல, அவரின் அரசியல் வாழ்வுக்கு உந்து சக்தியாக இருந்தவர். பல பொது நிகழ்வுகளில் நேரடியாக பங்கு கொண்டவர்.
மு.க.ஸ்டாலின் (திமுக பொருளாளர்):
கருணாநிதி மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த வைகோவின் தாயார் மாரியம்மாளின் மறைவு செய்து கேட்டு மனவேதனை அடைந்தேன். அவர் இறுதி மூச்சுவரை திராவிட இயக்க சிந்தனைகளுடன் வாழ்ந்தவர்.
விஜயகாந்த் (தேமுதிக தலைவர்):
கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது வைகோவின் தாயார் மாரியம்மாளை கலிங்கப்பட்டியில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். என் மீது அவர் காட்டிய பரிவும், பாசமும், விருந்தோம்பலும் நெகிழ வைத்தது. அரசியல் போராட்டத்தில் பெண்களும் பங்குபெற வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்):
வைகோவின் தாயார் மாரியம்மாள் மறைவு செய்தியறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். சமீபத்தில் கலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தி தனது உறுதியை வெளிப்படுத்தியவர். அனைத்துக் கட்சித் தலைவர்களின் மன்மதிப்பையும் பெற்றவர்.
தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்):
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கலிங்கப்பட்டியில் மாரியம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றதை மறக்க முடியவில்லை. வைகோவுக்கு மட்டுமல்ல பொதுவாழ்வில் உள்ள பெண்களுக்கும் ஊக்க சக்தியாக திகழ்ந்தவர் அவர்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):
இளம் வயது முதல் வைகோவுக்கு வழிகாட்டியாக, ஆலோசகராக இருந்த அவரது தாயார் மாரியம்மாள் மறைவு செய்தியறிந்து வேதனை அடைந்தேன். வாழ்வின் இறுதியில் கூட மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய அவரது மன உறுதி பாராட்டுக்குரியது.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):
அரசியல் வாழ்வில் வைகோவுக்கு வழிகாட்டியாக, ஆலோசகராக இருந்த அவரது தாயார் மாரியம்மாள் மறைவு செய்தி கேட்டு துயரம் அடைந்தேன். 95 வயதிலும் மதுக்கடையை மூடக்கோரி போராடிய அவரது மன உறுதி போற்றுதலுக்குரியது.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):
மாணவப் பருவம் முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு பெரும் தலைவராக உயர்ந்த வைகோவுக்கு பக்கபலமாக இருந்தவர் அவரது தாயார் மாரியம்மாள். அவரது மறைவு வைகோவுக்கு பேரிழப்பு.
வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்):
அண்ணன் வைகோவின் தாயார் மாரியம்மாள் நம்மைவிட்டு பிரிந்தார் என்ற செய்தி துயரத்தை தருகிறது.
ஈழத் தமிழர் பிரச்சனை, மதுவிலக்கு போன்ற தமிழினத்தின் வாழ்வுரிமைப் போராட்டங்களில் வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் அன்னை மாரியம்மாள்.
அண்மையில் கூட கலிங்கப்பட்டியில் மதுக்கடையை அகற்றும் கோரிக்கைக்காக தாமே தலைமை வகித்து போராடி பெண்களுக்கு உந்துசக்தியாக இருந்தவர் அன்னை மாரியம்மாள்.
அன்னை மாரியம்மாளை இழந்துவாடும் அண்ணன் வைகோ, அவர்தம் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.