

நூல் விலை உயர்வைக் கண்டித்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் ஒரு வார கால வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது. இதனால் நாளொன்றுக்கு ரூ.66 லட்சம் மதிப்பில் உற்பத்தி பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முக்கியத் தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. மேலும் இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
நூல் விலை உயர்வைக் கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இருப்பினும் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன், திருமுருகன் சிறு விசைத்தறி கூலித் தொழிலாளர் சங்கம், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் இன்று முதல் வருகிற 2-ம் தேதி வரை ஒரு வார கால வேலைநிறுத்தம் தொடங்கியது.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன் செயலாளருமான டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன் கூறும்போது, “கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கட்டு நூல் விலை 1,455 ரூபாயாக இருந்தது. தற்போது 1,845 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கட்டு நூல் விலை 390 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சேலைக்கு 45 முதல் 50 ரூபாய் விலை உயர்த்த வேண்டியது வரும். தற்போதுள்ள பொருளாதார நிலையில் விலையை உயர்த்தினால் விற்பனை பாதிக்கப்படும்.
எனவே, நூல் விலை உயர்வைக் கண்டித்து சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விசைத்தறிகளில் ஒரு வார கால உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளோம். இதனால் நாளொன்றுக்கு 66.60 லட்சம் மதிப்பில் உற்பத்தி பாதிக்கப்படும்.
சங்கரன்கோவிலில் மாதம் ஒன்றுக்கு 49,500 கட்டுகள் நூல் வாங்குகிறோம். அதற்கான தொகை 9.60 கோடி ரூபாய். அதற்கான ஜிஎஸ்டி 45.60 லட்சம் ஆகும். பிப்ரவரி மாதத்திலும் நூல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். காலவரையற்ற உற்பத்தி நிறுத்தம் செய்தால் மாதம் ஒன்றுக்கு 19.98 கோடி உற்பத்தி பாதிக்கப்படும். இதற்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி சுமார் 99.90 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும்.
நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுபோல் பருத்தி, பஞ்சு, நூலுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்து எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நூல் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்.