

பாஜக கூட்டணியில் நீடிப்பது பற்றியும், முதல்வர் வேட்பாளர் குறித்தும் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி பதில் அளித்துள்ளார்.
அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமி தொடங்கி வைத்து, கட்சியின் அடையாள அட்டையை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பாஜக கூட்டணியில்தான் நீடிக்கிறோம். வரும் 31-ம் தேதி புதுச்சேரிக்கு வரும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்திக்க உள்ளேன். புதுவையில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கு திரும்பினாலும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது" என்று குறிப்பிட்டார்.
அவரிடம் முதல்வர் வேட்பாளர் யார், புதுச்சேரியில் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு என்ஆர்.காங்கிரஸ் தலைமை தாங்குமா?, நமச்சிவாயம் பாஜகவில் இணைந்துள்ளது பற்றிய கருத்து எனப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதற்கு, "அனைத்துக் கேள்விகளுக்கும் பேச்சுவார்த்தையின்போது பதில் தெரியும்" என்று ரங்கசாமி தெரிவித்தார்.