பாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி

பாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி
Updated on
1 min read

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மக்கள் அதிகாரம் இயக்கத்தின் பிரச்சார பாடகர் கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் கலிபுல்லா, லலித் தலைமையிலான அமர்வு, "இந்த வழக்கை விசாரிக்க எந்த முகாந்தரமும் இல்லை" எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தது.

கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில், "கோவன் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதை பழக்கமாக கொண்டுள்ளார். மேலும், விசாரணையில் அவருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது" எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், இந்த அடிப்படையிலேயே, சென்னை எழும்பூர் பெருநகர நீதிமன்றம் கோவனை இரண்டு நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவன் கைதும், ஜாமீனும்:

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மக்கள் அதிகாரம் இயக்கத்தின் பிரச்சார பாடகர் கோவனை, சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீஸார் கடந்த அக்டோபர் 30-ம் தேதி அதிகாலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மதுவுக்கு எதிராக பாட்டுப் பாடி வந்த அவர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவனை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை பெருநகர தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கோவன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டதால், சென்னை கொரட்டூரில் உள்ள நீதிபதி சி.டி.செல்வம் வீட்டில் விசாரணை நடத்தப்பட்டது. கோவனை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோவன் மனு செய்தார். நவம்பர் 16-ம் தேதியன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆதிநாதன், கோவனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கோவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in