Last Updated : 27 Jan, 2021 04:04 PM

 

Published : 27 Jan 2021 04:04 PM
Last Updated : 27 Jan 2021 04:04 PM

திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்க ஏழை வீடுகளில் கழிப்பறை கட்டித் தந்தவருக்கு பத்மஸ்ரீ விருது

திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்த்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளுக்குக் கழிப்பறை கட்டித் தந்து வரும் ஸ்கோப் எம்.சுப்புராமனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் நாட்டின் உயரிய 'பத்ம' விருதுகள் வழங்கப்படும். நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான பட்டியலில் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 16 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் இடம்பெற்றுள்ளன.

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'ஸ்கோப்' தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் எம்.சுப்புராமனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. இதையடுத்து அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனத்தினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் எம்.சுப்புராமனைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து 'இந்து தமிழ்' இணையதளத்துக்கு எம்.சுப்புராமன் அளித்த பேட்டி:

பத்மஸ்ரீ விருதுப் பட்டியலில் என் பெயர் இருப்பதை அறிந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். மக்களுக்காகச் சேவை செய்தால், நிச்சயம் ஒருநாள் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற எனது நம்பிக்கை மெய்யாகியுள்ளது. கரூர் மாவட்டம் இனுங்கூர் அருகேயுள்ள புதுப்பட்டி எனது ஊர். இந்த கிராமத்தின் முதல் பட்டதாரி நான்தான். படிக்கும் வயதிலிருந்தே, கிராம முன்னேற்றத்துக்காக என்னால் முடிந்த பணிகளைச் செய்து வந்தேன்.

1986-ம் ஆண்டு 'ஸ்கோப்' தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி கிராமங்களிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டேன். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வங்கிக் கடன், தொழில்வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தேன்.

இதற்காகக் கிராமம், கிராமமாக சென்று வந்தபோது, பெரும்பாலான ஊர்களில் அங்குள்ள பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், திறந்த வெளியில் மலம் கழிப்பது தெரிய வந்தது. இதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக, அங்குள்ள மக்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகி, தங்களது வாழ்வாதார வருவாயின் பெரும்பகுதியை மருத்துவமனைகளுக்கே செலவிட்டனர். மேலும் பல கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு இருந்தது. எனவே இனி எனது சமூகப் பயணம் சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் சார்ந்ததாக இருக்க வேண்டும் என முடிவெடுத்து அதற்கான பணிகளைத் தொடங்கினேன்.

யுனிசெஃப், மத்திய, மாநில அரசுகள், தனியார் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வீட்டின் அமைப்பு, இட வசதி, தண்ணீர் வசதி போன்றவைக்குத் தகுந்தவாறு, பயளானிகளின் ஒத்துழைப்புடன் சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்தேன். இதில் ஏழைகளின் வீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதேபோல கழிப்பறையிலிருந்து வெளியேறும் மலம், சிறுநீர் ஆகியவற்றை விவசாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கிராமப்புறங்களில் 20 ஆயிரம் சூழல் மேம்பாட்டுச் சுகாதாரக் கழிப்பறைகளை அமைத்துக் கொடுத்தேன். மலத்தின் கசடுகளை உரமாக்கி, விவசாயத்துக்குப் பயன்படுத்தவும் வழிவகை செய்தேன்.

கழிப்பறை என்றாலே மூக்கைப் பிடித்துக்கொண்டு ஒதுங்குவோர் மத்தியில், கடந்த பல ஆண்டுகளாக இச்சேவையில் ஈடுபட்டு வரும் எங்களின் முயற்சியைப் பாராட்டி, மத்திய அரசு தற்போது பத்மஸ்ரீ விருது அளித்து மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளது. மண்ணும், தண்ணீரும் மாசுபடுவதைத் தடுக்கும் எங்களின் முயற்சி தொடரும். எங்களின் முயற்சிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் துணைநின்ற சாந்தஷீலா நாயர், அமுதா உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் மிகுந்த நன்றி'

இவ்வாறு எம்.சுப்புராமன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x