

மத்திய அரசின் விவசாய விரோத வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி, ஜனநாயக முறையில் அமைதியாக டிராக்டர் பேரணி நடத்தியதற்காக கடுமையான கொலை முயற்சி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்வது அதிமுக அரசின் பழிவாங்கும் கொடூரப் போக்கையே வெளிப்படுத்துகிறது என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
“தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது கோரிக்கையை ஏற்க மத்திய அரசு தயாராக இல்லை.
இந்நிலையில் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி தலைநகர் டெல்லியை நோக்கி நடத்துவதற்கு அனுமதி பெற்று, நடத்தப்பட்டபோது காவல்துறையினர் விவசாயிகள் மீது கடுமையான அடக்குமுறையை கையாண்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர்.
தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கிற வகையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற கூட்டணியை சேர்ந்த திமுக - காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் திருவாரூரை நோக்கி மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த முற்பட்டார்கள். கொரடாச்சேரியிலிருந்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் டிராக்டர் பேரணி புறப்பட்டது.
ஆனால், டிராக்டர் பேரணியை திருவாரூர் நகர எல்லையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்தி கடுமையாக தாக்க முற்பட்டனர். இந்நிலையில் டிராக்டர் பேரணி அமைதியான முறையில் திருவாரூர் நகரத்தை அடைந்து, அங்கே கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், எஸ்.எம்.பி. துரைவேலன் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் உரை நிகழ்த்திய பிறகு அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு 1.30 மணிக்கு கொரடாச்சேரியில் உள்ள எஸ்.எம்.பி. துரைவேலன் வீட்டு சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் அவரது வீட்டுக் கதவை தட்டி, கைது செய்யமுற்பட்டனர். 'இரவு நேரத்தில் நான் வெளியே வரமுடியாது. காலையில் காவல்நிலையத்திற்கு வருகிறேன்' என்று அவர்களிடம் கூறிய பிறகு, காவல்துறையினர் திரும்பி சென்று விட்டனர்.
காவல்துறையினர் தடையை மீறி, டிராக்டர் பேரணி நடத்தியதாகக் கூறி பூண்டி கலைவாணன், எஸ்.எம்.பி.துரைவேலன் உள்ளிட்ட பத்து பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதி ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்ய தேடி வருகின்றனர்.
மத்திய அரசின் விவசாய விரோத வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி, ஜனநாயக முறையில் அமைதியாக டிராக்டர் பேரணி நடத்தியதற்காக கடுமையான கொலை முயற்சி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்வது அதிமுக அரசின் பழிவாங்கும் கொடூரப் போக்கையே வெளிப்படுத்துகிறது”.
இவ்வாறு கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.