Published : 27 Jan 2021 03:17 PM
Last Updated : 27 Jan 2021 03:17 PM

தமிழ்நாட்டில் பெண்கள் ஏற்றுக்கொள்ளும் ரோல் மாடலாக விளங்கியவர் ஜெயலலிதா: முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர் திமுக தலைவர் ஸ்டாலின். அவருடைய தந்தை கருணாநிதி இறந்தபோது, இதே பகுதியில் அடக்கம் செய்வதற்காக ஜெயலலிதா நினைவகம் கட்டுவதை எதிர்த்து போடப்பட்ட வழக்குகளை இரவோடு இரவாக நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றவர் திமுக தலைவர் ஸ்டாலின் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அதிமுக தொண்டர்களிடையே பேசியதாவது:

ஜெயலலிதா 1948ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ம் தேதி இந்த மண்ணிலே பிறந்து இயக்கத்தையும் தமிழ்நாட்டின் மக்களையும் காப்பதற்காக இறைவன் கொடுத்த கொடை அவர்கள். சர்ச் பார்க் கான்வென்ட்டில் பள்ளிப்படிப்பை சிறப்புடன் அவர் முடித்தார். சிறு வயதிலிருந்தே கலையில் ஆர்வமும் திறமையும் ஒருங்கே பெற்றிருந்தார். பரதநாட்டியத்தை முறையாகக் கற்றுக் கொண்டவர். பல்வேறு மொழிகளிளே பேசக்கூடிய ஆற்றல் மிக்கத் தலைவி.

தமிழ்த்திரை உலகில் """"வெண்ணிற ஆடை"" படம் மூலம் அறிமுகமானார். திரைக் காவியங்களில், தான் ஏற்ற பாத்திரங்களில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடத்தில் தனக்கென இடம் பெற்றவர். எம்.ஜி.ஆருடன்பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். திரைத்துறைக்கு தான் அளித்த சிறப்பான பங்களிப்பினால் கலைமாமணி, பிலிம்ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அதிமுகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். அவர்கள் சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்தியபோது, அத்திட்டத்தின் உயர்மட்டக் குழுவில் ஜெயலலிதாவை உறுப்பினராக நியமித்து அந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அடிக்கல் அமைத்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். அவரை அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக தேர்ந்தெடுத்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கட்சிக்கு வளர்ச்சியை தேடித் தந்தவர்.

1984ல் மக்களவை உறுப்பினராக நியமனம் பெற்றார். மக்களவையில், அவரது வாதத் திறமையைக் கண்டு அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி வெகுவாகப் பாராட்டினார். 1989 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர். மறைவிற்குப்பின் நமது இயக்கத்தினை 1989ல் ஒருங்கிணைத்து, கழகத்தின் பொதுச்செயலாளராக பதவி ஏற்று கட்சியை வழிநடத்தியவர். தமிழ்நாட்டின் முதல்வராக 15 1/2 ஆண்டு காலம் ஆட்சி புரிந்து, வரலாற்றில் 36 ஆண்டுகளுக்குப்பின் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா.

ராணுவ கட்டுக்கோப்போடு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி, பெண்குலத்திற்கே பெருமை சேர்த்தவர், இரும்பு மங்கை என்று பெயர் பெற்றவர், எதிரிகளாலும் தைரியசாலி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர் அவர். இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சி அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் அளவுக்கு வென்று காட்டி பெருமைப்படுத்தியவர். இந்த வரலாற்றுச் சாதனையை இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தவொரு தலைவரும் நிகழ்த்தியதில்லை என்று பெருமைப்படும் அளவுக்கு வியப்பில் ஆழ்த்தியவர்.

அவர் நமக்கு வழங்கிய """"அமைதி-வளம்-வளர்ச்சி"" என்னும் தாரக மந்திரத்தில் செயல்பட்டு, அமைதிப் பூங்காவாக, நல்ல வளத்துடன், வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு வெற்றிநடைபோட்டு வருவது அனைவரும் அறிந்ததே. தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ஐ உருவாக்கி தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவெடுக்க அடிகோலியவர்.

69 சதவிகித இடஒதுக்கீட்டினை செயல்படுத்தி சமூகநீதியை நிலை நாட்டி, "சமூக நீதி காத்த வீராங்கனை". தமிழ்நாட்டிற்கான காவேரி நீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை, நீதிமன்றம் மூலமாக அரசிதழில் வெளியிட தொடர்ந்து போராடி வெற்றி கண்டு, காவேரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திய """"பொன்னியின் செல்வி". அதுமட்டுமல்லாமல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தி பெற்றி கண்டவரும் அவர். சென்னை நகரின் குடிநீர் பிரச்சனைக்காக புதிய வீராணம் திட்டத்தை நிறைவேற்றியவர்.

அவர் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் உலகளவில் பாராட்டைப் பெற்றன. அதை பலர் தங்கள் நாட்டிலும் நடைமுறைப்படுத்தினர். பெண் சிசுக்களைக் காக்க தொட்டில் குழந்தைகள் திட்டம், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் போன்று அவர் கொண்டு வந்த அம்மா உணவகம், ஏழை மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, அரிசி, மடிக்கணினி, மிதிவண்டி, கல்வி உபகரணங்கள், சீருடை, தாய்-சேய் பெட்டகம் என பல திட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் வாழ்வில் ஏற்றம் தந்தவர் அவர்.

சாதாரண மக்களும் வசதி படைத்த மக்களுக்கு இணையாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொண்டு வந்தவர். மழை நீர் சேகரிப்பு என்ற மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் நீர்வளம் பெருக அடித்தளமிட்டவர், சுனாமி, மழை வெள்ளமென்று இயற்கைப் பேரிடர்களின்போது அரசு இயந்திரம் முழு ஆற்றலுடன் இயங்க முன்மாதிரியாக இருந்தவர்.

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், பெண்கள் நலனைப் பாதுகாப்பதிலும் அவர் காட்டிய நெஞ்சுரமும், திறனும் கொண்டிருந்ததால் கனிந்த இதயம் கொண்ட இரும்புப் பெண்மணி என்று புகழ் பெற்றவர். நில அபகரிப்பு தடுப்புச் சட்டம் மூலமாக பல்வேறு குடும்பங்களின் உடைமைகளை மீட்டுக் கொடுத்த காவல் தெய்வம்.

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் திட்டங்களை அமல்படுத்தியவர். மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வழங்கியவர். திருக்கோயில்களில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடங்களென்று அறிவித்தவர் அவர்.

உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தை அறிவித்தவர். காவல் துறையில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்ததோடு முற்றிலும் பெண்களே பணியாற்றக்கூடிய நியாய விலைக் கடைகள், நூலகம் போன்று அறிமுகம் செய்தவர் அவர். அம்மா சிறு வணிகக் கடன் போன்ற எண்ணற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி, ஏழை மக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஊக்கம் அளித்தவர்.

ஆதரவற்ற பெண்களுக்கு திருமணத்திற்கு உதவித் தொகையும் தாலிக்குத் தங்கமும் கொடுத்தவர் அவர். பெண்கள் பாதுகாப்புடன் தங்குவதற்கு அரசு சேவை இல்லங்கள் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் தீட்டி செயல்படுத்தியவர். தமிழக அரசும், அவர் வழியிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்றென்றும் அரணாக தொடர்ந்து நின்று அவர்களை காத்து வருகின்றது. ஒரு தலைவனுக்கு உரிய ஆளுமைகளாக என்னென்ன கூறப்படுமோ அவை அத்தனையும் அவர்களின் இயல்பான குணங்களாக இருந்துள்ளது என்பது இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஒரு முன்னுதாரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் கட்சி, அரசியல் ஆர்வம் இல்லாத பல பெண்களிடம் சென்று உங்கள் ரோல் மாடல் யார் என்று கேட்டால் சற்றும் தாமதமில்லாமல் அவர்கள் ஜெயலலிதாவின் பெயரைத்தான் சொல்கிறார்கள் என்பதும், அவரைப்போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பல பெண்கள் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கின்ற காட்சியை நாம் காண்கின்றோம்.

இத்தகைய மாபெரும் மக்கள் தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரின் தன்னலமில்லா வாழ்விற்கு பொருத்தமாக மெரினா கடற்கரையில் இந்த மிகப் பெரிய நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான நினைவு மண்டபம் அமைக்க உலகளாவிய கட்டடக் கலை நிபுணர்களிடமிருந்து வரைபடங்களைப் பெற்று, எல்லோரும் பாராட்டும் வகையில் நிபுணர் குழு மூலம் வரைபடங்களைத் தேர்வு செய்து குறித்த காலத்திற்குள் இந்த நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவு மண்டபத்தில், ஃபீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவுச் சின்னத்துடன் அருங்காட்சியும், அறிவுத் திறன் பூங்கா, கரிங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி மற்றும் நீர்த்தடங்கள் மற்றும் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு எழில்மிகு தோற்றத்துடன் இன்று காட்சியளிக்கின்றது. இத்தனை சிறப்பும், இன்னும் எண்ணற்ற சிறப்பும் கொண்ட நினைவிடத்தை அவரை நேரில் கண்டு அவர்களிமிருந்து அரசியலையும், ஆட்சிக் கலைகளையும் கற்றுக் கொள்ள நமக்கெல்லாம் கிடைத்த வாய்ப்பு மகத்தானது.

அவரின் அருமை, பெருமைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக விளங்கிடவும், இங்கே அழகான நினைவிடத்தை ஜெயலலிதாவுக்கு அமைத்திருக்கின்றோம். இந்த நினைவிடத்தை கனத்த இதயத்துடன் பொதுமக்களுக்கு அப்பணித்திருக்கின்றேன். எம்.ஜி.ஆரின் நினைவிடமும் புதுப்பிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவராலும் அன்போடு அம்மா என்று அழைக்கப்படுபவர் ஜெயலலிதா. அந்த அளவிற்கு ஆழமான அன்பை அனைத்துத்தரப்பு மக்களிடமும் பெற்றவர், அம்மா ஒருவர்தான்.

அவர்களை நல்லடக்கம் செய்த இந்த இடத்தில் நினைவிடம் கட்டக்கூடாது என்று பினாமிகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர் திமுக தலைவர் ஸ்டாலின். அவருடைய தந்தை கருணாநிதி இறந்தபோது, இதே பகுதியில் அடக்கம் செய்யப்படுகின்ற நிலையில், ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த இடத்தில் நினைவகம் கட்டுவதை எதிர்த்து போடப்பட்ட வழக்குகளை இரவோடு இரவாக நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றவர் இதே திமுக தலைவர் ஸ்டாலின் தான்.

இதிலிருந்து, எந்த அளவுக்கு ஜெயலலிதா அவர்களுக்கு நினைவிடம் கட்டுவதை தடை செய்ய வேண்டும் என்ற தீய எண்ணம் கொண்டவர் திமுக தலைவர் ஸ்டாலின் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இவர்களது பினாமிகள் வழக்குகளை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஸ்டாலின் அவர்களின் கபட நாடகத்தை உலகமே அறிந்துள்ளது, இவரது சாயம் வெளுத்துள்ளது. இத்தகைய தீய எண்ணம் கொண்டவர் ஸ்டாலின்.

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மீண்டும் அவர் சொல்லிய இலட்சிய வார்த்தைகளுக்கிணங்க, அவருடைய ஆட்சியை அமைத்து, அவருடைய இதே நினைவு மண்டபத்தில் நாம் அனைவரும் நன்றி செலுத்துவதற்கு வீர சபதம் ஏற்போம்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x