Published : 27 Jan 2021 01:34 PM
Last Updated : 27 Jan 2021 01:34 PM

சீர்காழியில் தாய், மகனைக் கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: என் கவுன்டரில் கொள்ளையன் பலி, 2 பேர் கைது

கொல்லப்பட்ட தாய்-மகன்

மயிலாடுதுறை

சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசிக்கும் நகைக்கடை அதிபர் ஒருவரில் வீட்டிற்குள் புகுந்த வடமாநிலக் கொள்ளையர்கள் நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை கொலை செய்து 16 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களைப் பிடிக்கும் பணியில் ஒரு கொள்ளையர் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் சமீப காலமாக வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஓசூரில் வடமாநில கொள்ளையர்கள் 12 கிலோ தங்கத்தை முத்தூட் அடகு நிறுவனத்தில் புகுந்து கொள்ளையடித்துச் சென்றனர். இதில் சம்பந்தப்பட்ட ஜார்கண்ட், மத்தியபிரதேச கொள்ளையர்கள் 7 பேர் ஹைதராபாத்தில் மடக்கிபிடிக்கப்பட்டனர்.

இதேப்போன்று சென்னை தி.நகர் லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகளுடன் ராஜஸ்தானை சேர்ந்த ஊழியர் மாயமானார். இந்நிலையில் நேற்றிரவு சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டுக்குள் புகுந்த வடமாநில கொள்ளையர்கள் மூன்றுபேர் நகைக்கடை அதிபர், அவர் மனைவி மகன், மருமகளை தாக்கி 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசிப்பவர் தன்ராஜ் (50). நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆஷா(45). இவருக்கு அகில்(24) என்ற மகனும் உள்ளனர். அகிலுக்கு திருமணமாகி நிக்கில்(20) என்கிற மருமகளும் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இன்று அதிகாலையில் அவரது வீட்டுக்கதவை 3 பேர் கொண்ட கும்பல் தட்டியுள்ளது. வியாபார விஷயமாக வந்துள்ளதாக அவர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து கதவை திறந்து அவர்களை உள்ளே அனுமதித்துள்ளார் தன்ராஜ். உள்ளே நுழைந்தவுடன் கத்திமுனையில் தன்ராஜை மிரட்டிய அவர்கள் தடுக்க வந்த தன்ராஜ் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகிய இருவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்துள்ளனர்.

கைதான கொள்ளையன்

தன்ராஜ் அவரது மருமகள் நிக்கில் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தன்ராஜின் கார் சாவியை எடுத்துக்கொண்டு அவரது காரிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றனர். போகும்போது வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

தன்ராஜ் கூக்குரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தன்ராஜின் மருமகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தன்ராஜிடம் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்கள் தன்ராஜிடம் இந்தியில் பேசியதும் அவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அடகு நகை வியாபாரம் மற்றும் மொத்த நகை வியாபாரம் செய்து வந்ததை நன்கு அறிந்தே திட்டமிட்டு வீட்டில் நுழைந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

கொள்ளையர்கள் தப்பிச் சென்றதை அவ்வழியாக உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸர் ஆய்வு செய்தனர்.

கைதான கொள்ளையன்

இந்நிலையில் கொள்ளிடம் காவல் எல்லைக்குட்பட்ட எருகூர் அருகே வயல் வெளியில் கார் நிற்பதும், மூன்று வடமாநில இளைஞர்கள் கையில் பையுடன் ரத்தம் தோய்ந்த உடையுடன் திரிவதைப்பார்த்த பொதுமக்கள் கொள்ளிடம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கொள்ளிடம் போலீஸார் அங்கு விரைந்துச் சென்றனர். அங்கு அவர்களை பிடித்த போலீஸார் கொள்ளையடித்த நகைகள் வைக்கப்பட்டுள்ள வயல் வெளிப்பகுதியைக் காட்ட அழைத்துச் சென்றனர்.

அங்கு ஒரு கொள்ளையர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற இருவரை பிடித்த போலீஸார் கொள்ளையடித்த நகைகளை மீட்டனர். ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. அமைதியான சீர்காழியில் வடமாநில கொள்ளையர்கள் வீடுபுகுந்து கொடூரமாக தாய், மகனை கொலை செய்ததும், சிறிது நேரத்தில் கொள்ளையர்கள் பிடிபட்டதும், அவர்கள் போலீஸாருடன் நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x