Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

2020-ல் கரோனா தாக்கத்தால் 24 சதவீதம் வாகனப் பதிவு குறைவு: தமிழக ஆர்டிஓ.களில் ரூ.1,110 கோடி வருவாய் இழப்பு

கரோனா தாக்கத்தால் கடந்த ஆண்டில் தமிழக ஆர்டிஓ.களில் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்) வாகனங்கள் பதிவு செய்வது 24 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் ரூ.1,110 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.­

தமிழகத்தில் 83 ஆர்டிஓ அலுவலகங்கள் உள்ளன. இதுதவிர 60-க்கும் மேற்பட்ட பகுதி அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஒருநாளைக்கு சராசரியாக 8 ஆயிரம் பேர் புதியதாக வாகனங்களைப் பதிவு செய்து வந்தனர். இதுதவிர, வாகனங்கள் பதிவு எண் வழங்குதல், உரிமையாளர் பெயர் மாற்றம்,வாகன வரி வசூல், உரிமம் புதுப்பித்தல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன.

இதற்கிடையே, கரோனா ஊரடங்கால், மற்ற தொழில்களைவிட ஆட்டோமொபைல் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. புதிய வாகனங்கள் வாங்குவது பெரிய அளவில் குறைந்தது. இதனால், ஆர்டிஓ.களில் புதிய வாகனப் பதிவும் பெருமளவு குறைந்தது.

டிசம்பரில் அதிகரிப்பு

கரோனா ஊரடங்கில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டதால், ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு புதிய வாகனங்கள் வாங்குவது அதிகரித்து வந்தது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 1.23 லட்சம் வாகனங்கள் பதிவாகி இருந்தன. இருப்பினும், கடந்த 2019-ம் ஆண்டை ஒப்பிடும்போது, வாகனப் பதிவு 24 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல், இதர சேவைகளும் பாதிக்கப்பட்டன. இதனால், 2019-ல் ரூ.4,985 கோடியாக இருந்த ஆர்டிஓ.களின் வருவாய் 2020-ல் ரூ.3,875 கோடியாகக் குறைந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆர்டிஓ.களில் புதிய வாகன பதிவே இல்லை. ஜூன் மாதத்துக்குப் பிறகுதான் புதிய வாகனங்கள் வாங்குவது கணிசமாக உயர்ந்தது.

அதன்பிறகு, மாதந்தோறும் வாகனங்கள் பதிவு செய்வது படிப்படியாக உயர்ந்து வந்தது. ஒட்டுமொத்தமாக 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-ல் வாகனங்கள் பதிவு செய்வது 24 சதவீதம் குறைந்துள்ளது. 2019-ம் ஆண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் மொத்த வருவாய் ரூ.4,985 கோடியாகும். இதுவே, 2020-ல் ரூ.3,875 கோடியாக குறைந்தது. எனவே, கடந்த ஆண்டில் ரூ.1,110 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x