

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் வரை காங்கிரஸ் சார்பிலான போராட்டங்கள் தொடரும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
பூரண மதுவிலக்கை அமல் படுத்த வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், மாவட்டத் தலைவர்கள் கராத்தே தியாகராஜன், என்.ரங்கபாஷ்யம் உட்பட 200-க்கும் அதிகமான காங்கிரஸார் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இளங்கோவன் பேசியதாவது:
மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகின்றன. மதுவுக்கு எதிராக பாடிய கோவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அடக்குமுறைகளை காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது. தங்களுக்கு துரோகம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் 6 மாதங்களுக்குள் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் வரை காங்கிரஸின் போராட்டம் தொடரும்.
இவ்வாறு இளங்கோவன் பேசினார்.