

பெங்களூர் சிறையில் சசிகலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு அவரது குடும்பத்தினர் தான் காரணம் என அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சசிகலா சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர் வருமான வரி செலுத்தும் நபராக இருப்பதால் அதை தெரிவித்து அவருக்கு சிறையில் சிறப்பு வசதி பெற்றிருக்க முடியும். அதற்காக சசிகலாவின் வருமான வரி தாக்கல் விவரங்களைத் தருமாறு அவரது உறவினர்களிடம் பலமுறை கேட்டேன். கடைசி வரை கொடுக்கவில்லை.
இதனால் சசிகலா சிறையில் 4 ஆண்டுகளாக சாதாரண கைதியைப்போல் இருக்க நேர்ந்தது. சாதாரண கைதியாக இருக்கும்போது சிறையில் உள்ள பிற கைதிகளுடன் சேர்ந்து தான் இருக்க வேண்டும். இதனால்தான் சிறையில் சசிகலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
சசிகலாவின் இந்த நிலைக்கு அவரது குடும்பத்தினர்தான் காரணம். தற்போது அவர் தேறி வருவதால், அவரை விமர்சிக்க விரும்பவில்லை என்றார்.