

வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 24 இடங்களில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டன.
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினமான நேற்று டிராக்டர் பேரணி நடத்தினர். இதில், வன்முறை ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் நேற்று டிராக்டர் பேரணிகள் நடத்தப்பட்டன.
சில விவசாய சங்கங்கள் டிராக்டர் பேரணி நடத்த வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டன. டிராக்டர் பேரணி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்தது. ஆனால் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி தமிழகத்தில் பல இடங்களில் டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பேரணிகள் நடத்தப்பட்டன.
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அனைவரும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், விவசாயிகள் சிலர் டிராக்டரில் வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
திருச்சியில் கொள்ளிடம் பாலம் பகுதியில் டிராக்டர்களில் பேரணியாக சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் மறியல் போராட்டம் நடத்தினர். உழவர் சந்தை அருகே பலர் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றனர். விருதுநகரில் எம்.ஜி.ஆர் சிலை, மெயின் பஜார், தேசபந்து மைதானம் போன்ற நகரின் முக்கிய வீதிகளில் பலர் இரு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றனர்.
மதுரையில் முனிச்சாலையில்இருந்து தெப்பக்குளம் வரை எஸ்டிபிஐ கட்சி சார்பில் டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் இருந்து தொமுசவினர் ஆட்டோவில் பேரணியாகச் சென்றனர். இதேபோல, கோவை மற்றும் விழுப்புரம் ரயில் நிலையங்கள் அருகே, கடலூர் பேருந்து நிறுத்தம் அருகில் மற்றும் திருப்பூர், உடுமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் தேசிய கொடி கட்டி பேரணி நடைபெற்றது.
வாகனங்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் நேற்று 24 இடங்களில் டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றுள்ளன. தடையை மீறி பேரணியில் ஈடுபட்டதாக 11 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது. டிராக்டர், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் என 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என போலீஸார் தெரிவித்தனர்.
தள்ளுமுள்ளு; கைது
தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் போலீஸாரின் தடையை மீறி விவசாயிகள், அரசியல் கட்சியினர் டிராக்டர், இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தஞ்சாவூரில் நடந்த டிராக்டர் பேரணியை போலீஸார் சம்பவ இடத்திலேயே தடுத்து நிறுத்தினர். இதனால், தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். திருச்சியில் 40 பேர், அரியலூரில் 41 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அரியலூர் அண்ணா சிலை அருகே இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட முயன்ற பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டனர்.