Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த முதல்வரால் ஏற்பாடு செய்ய முடியுமா?- திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கேள்வி

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன் தினம் இரவு மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆவடி, பொன்னேரி, வடமதுரை, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில், திமுக மாணவரணி மற்றும் அதிமுக, அமமுக ஆகியவை சார்பில் தனித்தனியாக இக்கூட்டம் நடைபெற்றது. வடமதுரை, பொன்னேரியில் திமுகமாணவரணி சார்பில் நடந்த கூட்டங்களில் புலவர் இந்திரகுமாரி, கவிஞர் மனுஷ்யபுத்திரன் உரையாற்றினர்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவரணி சார்பில், ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற வீரவணக்க நாள் கூட்டத்தில், திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியதாவது:

இந்தி ஒழிப்புப் போராட்டத் தின்போது அரசாணையின் நகலை கொளுத்தியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியை சிறையில் அடைத்தவர் எம்ஜிஆர். ஆகவே எம்ஜிஆருக்கும் அதிமுகவுக்கும் வீரவணக்க நாள் கொண்டாடுவதற்கு அருகதை இல்லை.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேல் எடுப்பது தொடர்பாக கேள்விஎழுப்புகிறார்கள் முதல்வர் பழனிசாமியும், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும். கடவுளை நம்பாத நான் வேல் எடுத்து அலகுக் குத்தி, அரை நிர்வாணத்தோடு விபூதி பூசி வீதியில் அலைய தயார். ஆனால்முதல்வரும், தமிழக பாஜகவினரும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சமஸ்கிருதத்தை தவிர்த்துவிட்டு, கந்த சஷ்டி கவசம் சொல்லி தமிழில் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா?

முதல்வர் நான் யாருக்கும் அடிமை இல்லை என்று கூறுகிறார். அவர் என்றோ டெல்லிக்கு அடிமையாகிவிட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x