Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர்: ராகுலின் சுற்றுப்பயணம் குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில், ராகுல்காந்திக்கு மக்களின் வரவேற்பு அமைந்திருந்தது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்தும் அவர் வரவில்லை. உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு அதிமுக கட்சி அலுவலகத்தில் சிலை அமைப்பதிலோ, நினைவிடம் அமைப்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், நீதிமன்றத்தின் மாண்பை சிதைக்கிற வகையில் மக்கள் வரிப் பணத்தில் நினைவிடம் அமைப்பது நமது பாரம்பரியத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் முடக்கப்பட்டுள்ளது. பலமுறை சம்மன் அனுப்பியும் இந்த ஆணையத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் 10 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பதைவிட ஏமாற்று வேலை வேறு எதுவும் இருக்க முடியாது.

குடியரசு தினத்தில் நடக்கவேண்டிய கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதன்முலம் இந்த அரசு மக்களின் குரலை ஒடுக்க நினைக்கிறது. இதற்கான தண்டனையை மக்கள் வழங்குவர்.

ராகுல் காந்தியின் 3 நாள் சுற்றுப் பயணம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில், ராகுலுக்கு மக்களின் வரவேற்பு அமைந்திருந்தது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்தெழுந்து இருக்கிறார்கள் என்பதை ராகுலின் பயணத்தின் மூலம் உணர முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x