

தேர்தல் வருகிறது என்றதும் ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பதாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகும் கண்டுபிடிக்க முடியாத, கண்டுபிடிக்க விரும்பாத முதல்வர், துணை முதல்வருக்கு ஜெயலலிதா நினைவிடத்தைத் திறந்து வைப்பதற்கான தார்மீக உரிமை இல்லை.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 10-வது முறையாக அதிமுக அரசு காலநீட்டிப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகவில்லை.
தேர்தல் வருகிறது என்றதும்மக்களிடம் நாடகம் ஆடுவதற்காக ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்டுகிறோம் என்று இறங்கி இருக்கிறார்கள். ஜெயலலிதா மீது உள்ளார்ந்த அக்கறை, அன்பு, அவர் மீதானமரியாதை இருந்திருக்குமானால், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை உடைத்து, அதில்உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டனை வாங்கித் தந்திருக்க வேண்டும். அதைச் செய்து விட்டு நினைவகம் கட்டியிருக்க வேண்டும்.
திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம், கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைக்குக் காரணமானவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தருவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.