

புதுச்சேரி அரசு சார்பில் 72-வது குடியரசு தினவிழா உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காலை 8.30 மணிக்கு மைதானத்துக்கு வந்தார்.அவரை தலைமை செயலர் அஸ்வனிகுமார், டிஜிபி ரன்வீர் கிருஷ்ணியா ஆகியோர் வரவேற்றுவிழா மேடைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து காவல்துறையின் ஜீப்பில் சென்று போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, தலைமை செயலர் அஸ்வனிகுமார், டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணியா மற்றும் அரசு செயலர்கள் பங்கேற்றனர்.
ஆளுநர் கிரண்பேடி குடியரசு தினவிழா உரையில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸூக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையிலும் புதுவை அரசு முன்மாதிரியாக செயல்பட்டிருக்கிறது. அனைத்து விதமான முயற்சிகள் மற்றும் தீவிர நடவடிக்கைகளின் காரணமாக புதுவையில் கரோனாஇறப்பு விகிதம் குறைவாகவும், தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் விகிதம் மிகவும் அதிகமாகவும் இருக்கிறது. தடுப்பூசி பற்றிய எந்தவித பொய் பிரச்சாரங் களையும், வதந்திகளையும் நம்பத் தேவையில்லை.
நடப்பு நிதியாண்டில் முதலீடு மற்றும் வருவாய் பிரிவுகளின் கீழ் திட்ட ஒதுக்கீடாக ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. சமுதாய காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பாதாள கழிவுநீர் சாக்கடை அமைக்கும் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு புதிய இணைப்புகள் வழங்க செலுத்தப்படும் ஒரு முறை வைப்பு தொகையை அரசு தள்ளுபடி செய்துள்ளது. தேசிய உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை 45ஏ விரிவாக்கத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஒட்டுமொத்த எம்எல்ஏக்களும் புறக்கணிப்பு
இவ்விழாவில் முதல்வர், சபாநாயகரை தவிர்த்து அமைச்சர்கள், துணை சபாநாயகர், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என யாரும் பங்கேற்கவில்லை. குறிப்பாக, பாஜக நியமன எம்எல்ஏக்கள் கூட விழாவில் பங்கேற்கவில்லை. அதேபோல் அரசு செயலர்கள் மட்டுமே பங்கேற்றனர். புதுச்சேரி சிவில் சர்வீஸ் (பிசிஎஸ்) அதிகாரிகளும் பங்கேற்கவில்லை.
இதனால் விழா மேடை அருகே போடப்பட்டிருந்த அனைத்து இருக்கைகளும் அமர்வதற்கு ஆட்களின்றி காலியாக இருந்தன. இந்தாண்டு கரோனா பரவலையொட்டி சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பொதுமக்கள் யாரும் வராததால் பார்வையாளர் அரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் விஐபி பாஸ் பெற்று வருவோரும் யாரும் வரவில்லை. எப்டிஎஸ் எனப்படும் கோப்பு களை கண்டறியும் முறையை தலைமை செயலகம் மற்றும் அனைத்து துறைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி மக்கள் நலனை மையமாக கொண்ட சிறந்த ஆட்சியை வழங்குவதே புதுவை அரசின் நோக்கம். புதுச்சேரியை ஒரு முன்மாதிரியான மாநிலமாக உருவாக்கும் முயற்சிக்கு மக்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு தரவேண்டும் என்று குறிப்பிட்டார்.
திரும்பி பார்க்காமல் புறப்பாடு
ஆளுநர் கிரண்பேடி வந்தது முதல் முதல்வர் நாராயணசாமி பக்கம் திரும்பவில்லை. நிகழ்ச்சி முடிந்தவுடன் முதல்வர் எழுந்து நின்றார். ஆனால், ஆளுநர், அதிகாரிகள் பக்கம் திரும்பி பார்த்தபடி புறப்பட்டுச் சென்றார்.