

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான ‘வீடில்லாப் புத்தகங்கள்’ தொடர் தமிழக வாசகர்களிடையே மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யதாக சென்னையில் நடைபெற்ற வாசகர் திருவிழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நெகிழ்ச்சியுடன் குறிப் பிட்டார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் அவர் பேசியதாவது:
‘தி இந்து’ வாசகர்கள் குழுமியிருக்கும் இந்த அவையில் எனது நூல் வெளியிடுவதை பெருமையாக கருதுகிறேன். ‘தி இந்து’வில் ஓராண்டுகளுக்கு மேலாக நான் எழுதிய ‘வீடில்லாப் புத்தகங்கள்’ தொடர் வாசகர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பழைய புத்தகங்கள், சாலையோர புத்தகக் கடைகள் பற்றிய இந்தத் தொடர், தமிழ்ச் சமூகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
பெருமகிழ்ச்சி அடைகிறேன்
பல அரிய நூல்களை சாலையோர புத்தகக் கடைகளே எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. சாலையோர புத்தக வியாபாரிகள் யாரென்றுகூட நமக்குத் தெரியாது. அந்த கடைகளுக்கு புத்தகங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதும் தெரியாது. ஆனாலும், நமக்குத் தேவையான பல அறிவுப் பொக்கிஷங்களை அந்த வியாபாரிகள்தான் பாதுகாத்துத் தருகின்றனர். ‘தி இந்து’ இதழின் மகத்தான இந்தப் பயணத்தில், நானும் சிறு பங்களிப்பு செய்திருக்கிறேன். இந்தத் தொடரின் மூலமாக சாலையோர புத்தக வியாபாரிகளை கவுரவிக்க முடிந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார்.