

அனைத்து மதங்களையும் மதித்து நடப்பதே மதச்சார்பின்மையின் உண்மையான அர்த்தம் எனக் கூறியுள்ளார் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா.
சென்னை ஐஐடியில் நடந்த உலக அமைதி தொடர்பான கருத்தரங்கில் பேசிய தலாய் லாமா, மாற்றுக் கருத்தாளர்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது என்றார்.
அவர் மேலும் பேசும்போது, "கடந்த நூற்றாண்டில் வன்முறை மேலோங்கி இருந்தது. அதே நிலை தற்போதும் தொடர்கிறது. வன்முறை முட்டாள்தனமானது. மாற்றுக் கருத்துடையவர்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. அனைத்து மதத்தினரையும் மத நம்பிக்கை இல்லாதவர்களையும்கூட மதித்து நடப்பதே மதச்சார்பின்மையின் உண்மையான அர்த்தம். உலகில் உள்ள 7 பில்லியன் மக்களில் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் மத நம்பிக்கையில்லாதவர்கள். மதம் மீது நம்பிக்கை கொள்வதும், மத நம்பிக்கை துளியும் இல்லாமல் இருப்பதும் தனிநபர் சுதந்திரம்.
இந்தியாவில் பல்வேறு மதத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். உலக நாடுகளுக்கு இந்தியா சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது. சீனர்கள் எங்கு சென்றாலும் அங்கு சீனா டவுனை உருவாக்கிவிடுவார்கள். அதேபோல், இந்தியர்களும் எங்கு சென்றாலும் இந்தியா டவுன் உருவாக்கி மத நல்லிணக்கத்தை உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டும்.
இந்திய சப்பாத்தி, தால் உணவு வகைகளை நான் உண்டு இருக்கிறேன். நான் இந்திய அரசின் நீண்ட கால விருந்தாளி. என் நாடி நரம்புகளில் இந்தியா பின்னிப் பிணைந்திருக்கிறது. முகத்தில் புன்னகை இல்லாத மனிதரை என்னால் எப்போதே எதிர்கொள்ள முடியாது. நான் புன்னகையுடன் இருப்பதாலேயே தலாய் லாமாவாக இருக்கிறேன்.
அடுத்த தலாய் லாமாவாக ஒரு பெண் பொறுப்பேற்க அதிக வாய்ப்பு இருக்கிறது. உலகம் முழுவதும் 200 நாடுகளிலும் தலைமைப் பதவிகளில் பெண்கள் இருந்தால் உலகம் அமைதியாக இருக்கும்" என்றார் தலாய் லாமா.