

தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. திருச்செந்தூர் பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவர் தேசிய கொடியேற்றினார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தேசியக்கொடியை ஏற்றினார். சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், கரோனா தடுப்பு பணி, டெங்கு தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். செயற்பொறியாளர் சேர்மக்கனி, நகர்நல அலுவலர் வித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மெர்க்கன்டைல் வங்கி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி. ராமமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
வங்கியின் துணைத் தலைவர், பொதுமேலாளர்கள், துணைப் பொது மேலாளர்கள், உதவிப் பொது மேலாளர்கள், மண்டல மேலாளர், தலைமை அலுவலக அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், ஊழியர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
மீன்வளக் கல்லூரி
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பா.சுந்தரமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சிறந்தபணியாளர்களாக கணினி இயக்குநர்செ.தனபால் செபஸ்டின், எலக்ட்ரீசியன்கள் ஏ.ஆர்.பிரகாஷ், சூ.சுதாகர், உதவி கணக்கு அலுவலர் வி.தனுஷ்கோடி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வர் ஆ.ஜெயா சண்முகம் வரவேற்றார். பள்ளியின் நிறுவனர் ரா. சண்முகம் தேசிய கொடியேற்றினார். துணை முதல்வர் ரூபி ரத்னபாக்கியம் உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர் கொடியேற்றினார்
திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் தாளாளர் ச.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ச.உஷா முன்னிலை வகித்தார். மாவட்ட அளவில் இளம் விஞ்ஞானி விருதுக்கு தேர்வாகியுள்ள 6-ம் வகுப்பு மாணவர் ச.சிவகுகன் தேசியக் கொடியேற்றினார். ஆசிரியர் த.ஜார்ஜ்ராஜ் நன்றி கூறினார்.
திருச்செந்தூர் ராமையா பாகவதர் செந்தில்முருகன் நடுநிலைப்பள்ளியில் பள்ளி செயலாளர் சுப்பிரமணியன் தேசிய கொடியேற்றினார். தலைமை ஆசிரியை க.சுபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மணிகண்டன், கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாஸ்கர், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் கொடியேற்றினர். சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி அகிலாதேவி தேசியக் கொடியேற்றினார்.
ஈராச்சி பரிமேலழகர் இந்து நடுநிலைப் பள்ளியில் பள்ளிச் செயலாளர் தங்கமாரியப்பன், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி, நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ், நேஷனல்பொறியியல் கல்லூரி வளாகத்தில் கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர்கே.ஆர்.அருணாசலம், எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிறுவனர் எவரெஸ்ட் எம்.ராமச்சந்திரன், நாடார் மேல்நிலைப் பள்ளியில் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிசெல்வம், கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் கல்லூரிச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர். விளாத்திகுளம் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணக்குமார், வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ரகுபதி தலைமையிலும் விழா நடைபெற்றது.