

காங்கிரஸ் காப்பாற்றிய பொது நிறுவனங்களை பாஜக அரசு விற்று வருகிறது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் குற்றம் சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு சார்பில் இன்று குடியரசு தின விழா நடைபெற்றது.
விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் பேசியதாவது:
''மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுத்தது. வேறு எந்தக் கட்சியும் இதுபோன்று தமிழகத்துக்கு அமைச்சர் பதவிகளை வாரி வழங்கியது கிடையாது.
நம் நாட்டில் 110 தேசிய பஞ்சாலைகள் செயல்பட்டு வந்தன. அவற்றைப் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதால் தற்போது 2 பஞ்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.
காங்கிரஸ் அரசு காப்பாற்றிய பொது நிறுவனங்களை பாஜக அரசு விற்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த பல சட்டங்களுக்கு ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கியாக வேண்டும். அவற்றைத் திருத்தவோ, ரத்து செய்யவோ முடியாது.
காங்கிரஸ் கொண்டு வந்த உணவு பாதுகாப்புச் சட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்குப் பணம் கொடுக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. அதன்படிதான் தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.2,500-ஐ அதிமுக அரசு வழங்கியது. இந்தப் பணம் வழங்கியதற்கு சோனியா காந்தியும் ஒரு காரணம்தான்.
காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்தை வைத்து அதிமுக வாக்கு சேகரிக்கிறது. தமிழகத்தில் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.''
இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.