

மத்திய தகவல் ஆணையத்துக்குத் தமிழில் அனுப்பும் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்தி, ஆங்கிலத்தில் மனு செய்தால் மட்டுமே ஏற்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர், எம்.பி.க்களுக்கு மனு தரப்பட்டுள்ளது.
நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற அரசு நடக்கவே, பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இதற்கான மேல்முறையீடு செய்யும் மத்திய தகவல் ஆணையத்தில் நிலவும் மொழிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி, மதுரை எம்.பி. வெங்கடேசன், புதுவை எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
''தகவல் அறியும் உரிமைச் சட்ட மேல்முறையீடுக்காக டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஆணையம் இந்தி, ஆங்கில மொழியில் மனு செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறது. தமிழ் மொழியில் மேல்முறையீடு செய்தால் நிராகரிப்பு செய்கின்றனர். ஆணையம் அனைத்து மொழிகளையும் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்களை நியமித்து அனைத்து மாநில மொழி மனுக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளை நிராகரிப்பு செய்வதால் பாமர மக்கள் இச்சட்டத்தின் மூலம் பயன்பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்தி மொழி என்பது தொடர்பு மொழியே தவிர தேசிய மொழி அல்ல. மேலும், இந்திய ரூபாயில் தமிழ் மொழி உட்பட பதினைந்து மாநில மொழிகளில் ரூபாயின் மதிப்பு அச்சிடப்பட்டுள்ள நிலையில் மத்திய தகவல் ஆணையம் தமிழ் மொழியால் அனுப்பும் மனுக்களை நிராகரிப்பது ஏற்புடையதல்ல.
பொதுவாக ஆங்கிலம், இந்தி மொழி அறியாத பாமர மக்கள் அனைவரும் அவரவர் மாநில மொழியில்தான் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்து தகவல் கிடைக்காத நிலையில் அவர்கள் மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்வர்.
எனவே, தமிழ் மொழியை அடிக்கடி வெகுவாகப் பாராட்டிப் பேசி வரும் பிரதமரும், தமிழில் தேர்வு நடத்தக் குரல் கொடுத்த மதுரை எம்.பி.யும், புதுச்சேரி எம்.பி.யும் இந்த மனுவின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, தமிழ் மொழியில் மேல்முறையீடு செய்தால் அந்த மனுவினை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு ரகுபதி தெரிவித்துள்ளார்.