Published : 26 Jan 2021 07:04 PM
Last Updated : 26 Jan 2021 07:04 PM

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல்; ஒரு விவசாயி மரணம்: கண்டனக் குரல் எழுப்ப மார்க்சிஸ்ட் வேண்டுகோள்

அமைதியாகப் போராடி வரும் விவசாயிகளைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி, விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிற மத்திய மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அனைத்து அரசியல் இயக்கங்களும் இதற்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“மத்திய அரசு பிறப்பித்த விவசாயிகளுக்கு விரோதமான மூன்று மத்திய சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென 62 நாட்களுக்கும் மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். இதுவரை ஒரு சிறு வன்முறையோ, அசம்பாவிதமோ அங்கு நடைபெறவில்லை. தங்களைத் தாக்கிய காவல்துறையினருக்குக் கூட விவசாயிகள் உணவு வழங்கும் காட்சியை நாடே பார்த்தது.

தங்களது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கத் தயார் இல்லாத நிலையில் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவது என விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்தது. அந்தப் பேரணியை முடக்குவதற்கு பகீரத முயற்சியை மோடி அரசு மேற்கொண்டது. உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டு பேரணியைத் தடை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தது.

ஆனால், உச்ச நீதிமன்றம் காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இன்று (26.1.2021) அமைதியான முறையில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது மத்திய காவல்படையினர் கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்துள்ளனர். ஒரு விவசாயி மரணமடைந்துள்ளார். பல நூறு விவசாயிகள் படுகாயம் அடைந்து டெல்லி நகர வீதிகளில் விவசாயிகள் ரத்தம் சிந்தியுள்ளனர்.

அமைதியாகப் போராடி வரும் விவசாயிகளைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி, விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிற மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய அரசின் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் கண்டனக் குரல் எழுப்ப முன்வர வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கண்டன இயக்கம் நடத்த முன்வரும் அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உடனடியாகக் கண்டன இயக்கங்களை நடத்திட கட்சி அணிகளை கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x