

காங்கிரஸிலிருந்து விலகிய நமச்சிவாயம் டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் நட்டா முன்னிலையில் நாளை இணைகிறார். அவருடன் தீப்பாய்ந்தானும் சேருகிறார். மேலும் பல எம்எல்ஏக்கள் காங்கிரஸிலிருந்து விலக உள்ளதால் ஆட்சிக்கு ஆபத்து உருவாகியுள்ளது.
புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் 2-வது அமைச்சராக இருந்தவர் நமச்சிவாயம். நாராயணசாமி மீதான அதிருப்தியால் நமச்சிவாயம் தனது அமைச்சர், எம்எல்ஏ பதவியை திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். அவருடன் ஊசுடு தனித் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவகொழுந்துவைச் சந்தித்து அளித்தனர். இதனையடுத்து இருவரின் ராஜினாமாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நமச்சிவாயம் டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டார். டெல்லியில் நாளை காலை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து கட்சியில் இணைகிறார். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெறுகிறார். புதுச்சேரி கடன் ரத்து உட்பட முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலையும் அவர் தர உள்ளார்.
பின்னர் புதுவைக்குத் திரும்பும் நமச்சிவாயம் வரும் 31-ம் தேதி ஏஎப்டி திடலில் நடைபெறும் பாஜக தேசியத் தலைவர் நட்டா பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் புதுவை மாநிலம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை இணைக்கிறார். இதனிடையே நாளை முதல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் பலர் விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஊகத்தின் அடிப்படையில் பலர் பெயர் கசிந்தாலும், விரைவில் விவரம் தெரியும் என்கின்றனர். இதனால் ஆட்சிக்கு ஆபத்து உருவாகியுள்ளது.