Last Updated : 26 Jan, 2021 05:46 PM

 

Published : 26 Jan 2021 05:46 PM
Last Updated : 26 Jan 2021 05:46 PM

டெல்லி விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து புதுச்சேரியில் ஏஐடியுசி, விவசாயிகள் சங்கத்தினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுச்சேரியில் ஏஐடியுசி தொழிற்சங்கம், விவசாய சங்கம் சார்பில் குடியரசு தின கொடியேற்று விழா-மோட்டார் சைக்கிள் ஊர்வலம் இன்று(ஜன 26) நடைபெற்றது.

புதுச்சேரி- கடலூர் சாலையில் உள்ள ஜூலை 30 தியாகிகள் சிலை அருகே ஏஐடியுசி தொழிற்சங்கம், விவசாய சங்கம் சார்பில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுதந்திரக் கொடி ஏந்தியும், விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தொழிலாளர்களுக்கு விரோதமாகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியபடி அங்கிருந்து மோட்டார் சைக்கிள் ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலத்துக்கு ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் சேது செல்வம் தலைமை தாங்கினார். மாநிலச் செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசியக் கொடியை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஏற்றிவைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விவசாய சங்க மாநிலத் தலைவர் கீதநாதன், விவசாய சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ரவி, ஏஐடியுசி நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் அண்ணா சாலை வழியாக காமராஜர் சாலை, ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை, சுப்பையா சிலை, மறைமலையடிகள் சாலை வழியாக சென்று வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே ஊர்வலம் முடிவடைந்தது.

சிஐடியு ஊர்வலம்:

இதேபோல் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் புதுச்சேரியில் வாகனப் பேரணி நடைபெற்றது. காந்தி வீதி ஈஸ்வரன் கோயில் அருகே புறப்பட்ட இப்பேரணியை அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகனன் தொடங்கி வைத்தார்.

பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் இருசக்கர மற்றும் ஆட்டோக்களில் தேசியக் கொடியேந்தி பங்கேற்றனர். அஜந்தா சிக்னல், படேல் சிலை, அண்ணா சாலை, மறைமலையடிகள் சாலை வழியாக கடலூர் ரோட்டில் உள்ள ஜூலை 30 தியாகிகள் சிலை அருகே பேரணி நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு தேசியக் கொடியை சிஐடியு பிரதேசத் தலைவர் முருகன் ஏற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x