Published : 26 Jan 2021 03:56 PM
Last Updated : 26 Jan 2021 03:56 PM

விவசாயத்தில் அதிக உற்பத்தி திறன்; நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னை

மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினைக் கடைப்பிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயியை ஊக்குவிக்க வழங்கப்படும் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் பழனிசாமி இன்று வழங்கினார்.

நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது

மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினைக் கடைப்பிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயினை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா அன்று தமிழக முதல்வரால் சிறப்புப் பரிசும், பதக்கமும் 2011-12ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இச்சிறப்புப் பரிசு பெறும் விருதாளருக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், ஏழாயிரம் ரூபாய் மதிப்பிலான பதக்கமும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மேற்காணும் விருது "சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது" என முதல்வரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான விருதினைப் பெறுபவர் செல்வகுமார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரம், வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கிராமத்தில் விவசாயம் செய்துவரும் செல்வகுமார், என்பவர் கடந்த 8 ஆண்டுகளாகவே திருந்திய நெல் சாகுபடி முறையினைப் பின்பற்றி வருகிறார். அவர் ஏ.எஸ்.டி 16 ரக விதைகளை அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் சூடோமோனஸ் கொண்டு விதை நேர்த்தி செய்தார்.

இதன் மூலம் விதைகள் மூலமாகப் பரவும் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். பின்னர், திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்ய பாய் முறையில் நாற்று தயார் செய்தார். ஏக்கருக்கு ஒரு ஆட்டுக்கிடையை (300 எண்ணம் ஆடுகள்) மூன்று நாட்கள் அமைத்துள்ளார். அடுத்து 4 டிராக்டர்கள் வீதம் (8 டன்) தொழு உரம் இட்டு உழவு செய்துள்ளார். வயல்களைச் சுத்தம் செய்து தக்கை பூண்டு பயிர் செய்து பூவெடுக்கும் பருவத்தில் நீர் பாய்ச்சி மடக்கி உழவு செய்தார்.

மேலும், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தொழு உரத்துடன் கலந்து வயலில் இட்டார். நெல் நாற்று 14-ம் நாளில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்தார். சோலார் விளக்கு பொறி நிறுவி இதனால் பூச்சி தாக்குதல் குறைந்து ரசாயன மருந்து அவசியமில்லாமல் போனது. 15, 25, 40 ஆகிய நாட்களில் கோனோ வீடர் களைக்கருவி கொண்டு முன்னும் பின்னும் உருட்டி களைகள் மண்ணில் புதைக்கப்பட்டன. இதனால் களைகள் கட்டுப்பட்டு தூர்கள் கிளைத்து இருந்தன.

மாநில மற்றும் மாவட்ட அளவிலான பிரதிநிதிகள் முன்னிலையில் 30.01.2020 அன்று 50 சென்ட் பரப்பில் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை மேற்கொள்ளப்பட்டு நெல்மணி எடை 3,380 கிலோ பெறப்பட்டது. ஹெக்டேர் மகசூல் 16,900 கிலோ தானிய மகசூல் பெற்று மாநில அளவிலான முதல் பரிசைப் பெறத் தகுதியுடையவராகிறார்.

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினைக் கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெற்ற செல்வகுமாரைப் பாராட்டிப் போற்றும் வகையில் இவருக்கு தமிழ்நாடு அரசு 2020-21-ம் ஆண்டில் முதல்வரின் "நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது"-க்கான ஐந்து லட்சம் ரூபாயும், பதக்கமும் மற்றும் சான்றும் வழங்கி அரசு சிறப்பித்தது.

சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கான விருதுகள்:

புதிதாக உழவர் உற்பத்தியாளர் குழுமங்களை உருவாக்கி வலுப்படுத்துவதன் மூலம் வேளாண் பெருமக்களுக்கு போதிய அதிகாரம் வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயிர் சாகுபடியுடன், அறுவடைக்குப் பின் விளைபொருட்களுக்கான வணிகத்தையும் கூட்டாக மேற்கொள்ளும் வகையில், 500 முதல் 1,000 விவசாயிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் அமைப்பே உழவர் உற்பத்தியாளர் குழுமம் ஆகும்.

இத்தகைய உழவர் உற்பத்தியாளர் குழுமங்களை மேம்படுத்துவதற்கு உகந்த சூழ்நிலையினை நமது மாநிலத்தில் ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதல்வர், "உழவர் உற்பத்தியாளர் குழுமங்களை மேம்படுத்துவதற்கான கொள்கை" ஒன்றை வெளியிட்டார்.

கடந்த ஆண்டுகளில், ஆளுமை மற்றும் வர்த்தகப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் குழுமங்களை அங்கீகரிக்கவும் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, உழவர் உற்பத்தியாளர் குழுமப்பணிகளில் ஆளுமை மற்றும் வர்த்தகத்தில் சிறப்பாகச் செயலாற்றும் தலா இரண்டு உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கு விருது வழங்கும் திட்டத்தினை வேளாண்மைத் துறை தொடங்கியுள்ளது.

நடப்பாண்டில் கீழ்க்கண்ட உழவர் உற்பத்தியாளர் குழுமங்கள் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 4 உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஆளுமையில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கான விருது:

* ஈரோடு துல்லியப் பண்ணைய உற்பத்தியாளர் குழுமம்

ஈரோடு துல்லியப் பண்ணைய உற்பத்தியாளர் குழுமம் 2008ஆம் ஆண்டு 5 லட்சம் பங்குத் தொகையுடன் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது 558 பங்குதாரர்களுடன் ரூபாய் 1.39 கோடி பங்கு மூலதனத்துடன், கடந்த ஆண்டு ரூபாய்.11.70 கோடிக்கு வணிகம் செய்துள்ளது.

இந்தியாவிலேயே ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுமமே ஆதார நிறுவனமாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு 88 உழவர் உற்பத்தியாளர் குழுமங்களை வழிநடத்தி வரும் ஒரே குழுமமாகும்.

இக்குழுமத்தின் அக்ரோசர்வீஸ் சென்டர், கிசான் சேவாகேந்திரா, பெட்ரோல் டீசல் பங்க், நஞ்சற்ற உணவுப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்து வருகிறது. இக்குழுமம் விதை சுத்திகரிப்பு நிலையம், காய்கறி மற்றும் பழங்களுக்கான முதன்மை பதப்படுத்தும் மையம் ஆகியவற்றைச் செயல்படுத்தி வருகிறது.

கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் மளிகைப் பொருட்கள், காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றினை 12 மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு சானிடைசர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான அவசர கால நிவாரண நிதி மற்றும் முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா 25 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

* வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் குழுமம்

இக்குழுமம், அரசு மற்றும் ஈஷா அவுட்ரீச் ஆகியவற்றின் உதவியோடு 2013-ம் ஆண்டு நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட 4 ஆண்டுகளிலேயே மொத்த வரவு செலவில் தமிழ்நாட்டில் முதலாவதாகவும் இந்திய அளவில் உள்ள 769 உழவர் உற்பத்தியாளர் குழுமங்களில் 14ஆவதாகவும் இந்திய அரசின் அமைப்பால் மதிப்பிடப்பட்டுள்ளது. 2018-19ஆம் நிதி ஆண்டில் வரவு செலவு ரூ.11.95 கோடியாகப் பெருகியது.

இந்த உழவர் உற்பத்தியாளர் குழுமம், விவசாய விளைபொருட்கள் (தேங்காய், பாக்கு மற்றும் காய்கறிகள்) வணிகம், தேங்காய் மதிப்பு கூட்டல், சொட்டுநீர் பாசன விற்பனையகம், விற்பனைக் கடைகள் போன்ற பலவித வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசின் வினியோக தொடர் மேலாண்மைத் திட்டத்தில் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தின் சந்தை ஒருங்கிணைப்பு பங்குதாரராகவும் இருந்து வருகிறது.

புதுடெல்லியில், 2020-ம் ஆண்டில், மத்திய அமைச்சரிடமிருந்து தேசிய அளவில் ‘சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமம்’ என்ற விருதை பெற்றது.

* வர்த்தகத்தில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கான விருது:

தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் குழுமம் தமிழ்நாடு வாழை உழவர் உற்பத்தியாளர் குழுமம், 47 வாழை உற்பத்தியாளர் குழுக்களையும், 4 உற்பத்தியாளர் சங்கங்களையும் சேர்ந்த 1065 பங்குதாரர்களுடன் 2014-ல் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூபாய் 8.59 கோடிக்கு வணிகம் செய்துள்ளது. இக்குழுமத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கூட்டமைப்பின் வாயிலாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தோடு இணைந்து அறுவடை செய்த தார்களை வெளிக்கொணர கம்பிவட சுமை கடத்தி அமைப்பை வடிவமைத்து செயல்படுத்தி அதன் மூலம் வாழைத்தார்களை அறுவடை செய்து ஐரோப்பாவிலுள்ள இத்தாலி நாட்டிற்கு 30 நாட்கள் கடல்வழிப் பயணமாக அனுப்பிவைத்து இந்திய ஐரோப்பிய வாழை வர்த்தகத்திற்கு வழிகோலிய முன்மாதிரி திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.

வாழைப் பழங்களை கதிரொளி உலரகம் மூலம் மதிப்பு கூட்டிய பழ அத்தியாகவும், பவுடராகவும் மற்றும் மென்சுவை சாக்லேட் போன்றவற்றைத் தயாரித்து சந்தைப்படுத்துகிறது. 6 முதன்மை பதப்படுத்தும் நிலையங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறது.

* விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுமம்

விருதை சிறு தானிய உழவர் உற்பத்தியாளர் குழுமம் 2016ஆம் ஆண்டு 1500 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூபாய் 3.01 கோடிக்கு வணிகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமத்திற்கான விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது.

இக்குழுமம் சிறுதானியம் மற்றும் சிறுதானிய மதிப்புக் கூட்டல் பொருட்கள் எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் உற்பத்தி செய்து, இதுவரை 102 விதமான மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களைச் சந்தைப்படுத்தி வருகின்றனர். மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருட்களை நவீன இயந்திரங்கள் உதவியுடன், தன் சொந்தத் தயாரிப்பில், உள்ளூர் மட்டும் வெளிநாடுகளுக்கு (ஓமன், கத்தார், குவைத், அமெரிக்கா, ஜெர்மன், கனடா) ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இதுவரை, சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருது, சிறந்த விவசாயத் தொழில் துறைக்கான விருது மத்திய அரசாலும் மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கான விருது பெற்றுச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x