

கோவை பகுதியில் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றிவரும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள "தாஜூல் இஸ்லாம் ஹனபி சுன்னத் ஜமாத்" பள்ளிவாசலின் தலைவர் அப்துல் ஜப்பார் என்பவருக்கு 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு, மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் பெயரால் ‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்’ என்ற பதக்கத்தினைத் தோற்றுவித்து, ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காகச் சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அப்பதக்கத்தை வழங்கி வருகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்குப் பதக்கமும், ரூ.25,000/-க்கான கேட்புக் காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு (2021) ‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்’ கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.அப்துல் ஜப்பாருக்கு வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில் வசித்து வரும் கே.ஏ.அப்துல் ஜப்பார் (51), என்பவர் கோயம்புத்தூர் பகுதியில் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார். இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள "தாஜூல் இஸ்லாம் ஹனபி சுன்னத் ஜமாத்" பள்ளிவாசலின் தலைவராகக் கடந்த 13 வருடங்களாக இருந்து வருவதுடன், குனியமுத்தூர் பகுதியில் மதரீதியான பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் தாமாக முன்வந்து எவ்வித மதப் பாகுபாடின்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்க உதவியுள்ளார்.
மேலும், இவர் கண் சிகிச்சை முகாம், ரத்ததான முகாம், மருத்துவ முகாம், கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி, மருத்துவ உதவி போன்ற சமூகப் பணிகளையும் செய்துவருகிறார். இவ்வாறு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு வரும் கே.ஏ.அப்துல் ஜப்பாரைப் பாராட்டும் வகையில், இவருக்குக் குடியரசு தின விழாவில் 2021ஆம் ஆண்டிற்கான 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' வழங்கப்பட்டது.