Published : 26 Jan 2021 01:39 PM
Last Updated : 26 Jan 2021 01:39 PM

பொதுமக்கள் உயிரைக் காத்த கால்நடை மருத்துவர், ரயில் ஓட்டுநர், தனியார் வாகன ஓட்டுநருக்கு அண்ணா பதக்கம்: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னை

கிணற்றில் விழுந்த யானையை சமயோசிதமாக மீட்ட மருத்துவர், விபத்தில் சிக்காமல் ரயிலை நிறுத்தி 1,500 பயணிகளைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர், பேரிடர் நேரத்தில் விபத்தில் சிக்கிய காவலரை மருத்துவமனைக்குக் கொண்டுசேர்த்த வாகன ஓட்டுநர் ஆகியோருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

ஓவ்வொரு ஆண்டும், தமிழக அரசு, வீர தீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள் / பொது மக்களுக்கு வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1,00,000/-க்கான (ரூபாய் ஒரு லட்சம்) காசோலையும், ரூ.9,000/ மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.

இவ்வாண்டுக்கான வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை நான்கு நபர்களுக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார். அதில் ஒருவர் உதவி ஆசிரியை முல்லை ஆவார்.

எ.பிரகாஷ், கால்நடை உதவி மருத்துவர், ஓசூர் வனச்சரகம், சேலம் மாவட்டம்.

தருமபுரி வனக்கோட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட எல்லகுண்டூர் என்ற கிராமத்தில் நவ.19/2020ஆம் தேதியன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சுற்றுச் சுவர் இல்லாத, சுமார் 60 அடி ஆழமுள்ள, 5 அடி தண்ணீர் கொண்ட கான்கிரீட் கிணற்றில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க மக்னா யானை தவறி விழுந்துவிட்டது. தகவலறிந்து வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வெளியே மீட்டுக் கொண்டு வர முயற்சி செய்து, யானைக்கு மருத்துவரால் மயக்க மருந்து செலுத்தப்பட்டது.

மருத்துவரின் ஆலோசனைப்படி மயக்க நிலையில் கிணற்றில் இருந்து யானையின் கால்கள் அதிவிரைவு மீட்புக் குழுவினரால் கயிறு கொண்டு கட்டப்பட்டு, மெதுவாகக் கிணற்றிலிருந்து மேலே கொண்டுவரப்பட்டது. அப்போது சுற்றியிருந்த பொதுமக்களைக் கண்டு, யானை மிரண்டு தாக்க முற்பட்டபோது, போதிய கால அவகாசம் இல்லாததால் மயக்க மருந்தினை அதற்கான துப்பாக்கி மூலம் செலுத்த இயலாததால், வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், தனது வெறும் கையாலேயே தனது உயிரையும் பொருட்படுத்தாது, உடனடியாக யானையின் அருகில் சென்று அதற்கு மீண்டும் மயக்க மருந்து செலுத்தினார்.

சுமார் 18 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்நிகழ்வின்போது வன கால்நடை உதவி மருத்துவர் மற்றும் குழுவினரின் செயலினால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் யானையின் உயிர் பாதுகாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி சம்பவத்தில் உயிரைத் துச்சமென நினைத்து, ஆபத்திலிருந்த யானையை உயிருடன் காப்பாற்றியதற்காக, கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷுக்கு குடியரசு தின விழாவில் 2021-ம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

ஜெ. சுரேஷ், ரயில் வண்டி ஓட்டுநர், மதுரை மாவட்டம்

சுரேஷ் ரயில் வண்டி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 18.11.2020 அன்று மதுரை சென்னை-வைகை விரைவு வண்டியை மதுரையிலிருந்து ஓட்டிச் சென்றபோது கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையில் ரயில் தண்டவாளத்தில் நிலச்சரிவினால் மிகப்பெரிய இரண்டு பாறாங்கற்கள் கிடந்தன. அன்று மேகமூட்டம் காரணமாக ரயில் பாதை தெளிவாகத் தெரியவில்லை.

இந்த நிலையிலும் பாறாங்கற்களைப் பார்த்தவுடன் உடனடியாக அவசர பிரேக்கை (emergency brake) உபயோகப்படுத்தி மிகக் குறைந்த தூரத்தில் பாறாங்கற்களுக்கு முன்பாக வண்டியை நிறுத்திவிட்டார். இல்லையென்றால் ரயில் பெட்டிகள் விபத்தில் சிக்கி ரயிலில் பயணம் செய்த சுமார் 1,500 பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கக் கூடும்.

சுரேஷ் சமயோசிதமாகத் துணிச்சலுடன் செயல்பட்டு விபத்து ஏற்படாமல், ரயிலில் பயணம் செய்த சுமார் 1,500 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக அரசு அவருக்குக் குடியரசு தின விழாவில் 2021-ம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கியது.

பொதுமக்கள் பிரிவு ஆர்.புகழேந்திரன், குந்தா தாலுகா, நீலகிரி மாவட்டம்.

ரா.புகழேந்திரன் நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் தனியார் வாடகை வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். பிரசவம், மருத்துவ அவசரம், பேரிடர்க் காலம் போன்ற பல இக்கட்டான சூழ்நிலைகளில் அழைக்கும்போது வாகனத்தை இயக்கி சரியான நேரத்தில் மருத்துவமனை கொண்டு சேர்த்து பல உயிர்களைக் காப்பாற்றி உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 04/2020 அன்று நீலகிரி மாவட்டத்தில் மிக அதிக கனமழை மற்றும் சூறைக்காற்றினால் ஏற்பட்ட பேரிடரின்போது மஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் ஆகியவை முறிந்து விழுந்திருந்தன.

இதன் காரணமாக ஆக.05/2020 அன்று சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மரம் ஒன்று முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மஞ்சூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரியும் ஜெயராம் என்பவருக்கு முதுகு தண்டுவடத்திலும், வலது கை தோள் பட்டையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அதன் பிறகு ஓட்டுநர் ரா.புகழேந்திரனை அழைத்த சிறிது நேரத்தில் தனக்குச் சொந்தமான வாகனத்தை எடுத்து வந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காவலர் ஜெயராமை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு துரிதமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்பட்டு சரியான நேரத்தில் கோவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காகச் சேர்த்து காவலர் ஜெயராமின் உயிரை காப்பாற்றியதற்காக தனியார் வாடகை வாகன ஓட்டுநர் ரா புகழேந்திரனுக்குக்கு குடியரசு தின விழாவில் 2021-ம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x