Last Updated : 26 Jan, 2021 01:27 PM

 

Published : 26 Jan 2021 01:27 PM
Last Updated : 26 Jan 2021 01:27 PM

கோவை நீர்நிலை பாதுகாப்பு அமைப்புகள் முன்வைக்கும் 29 கோரிக்கைகள்: அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறுமா?

கோவை

கோவையைச் சேர்ந்த நீர்நிலை பாதுகாப்பு அமைப்புகள், அரசியல் கட்சிகளின் முன்பு 29 கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. இவை அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டுச் சங்கம், சின்ன வேடம்பட்டி ஏரி பாதுகாப்புச் சங்கம், காளிங்கராயன் குளம் நீர்நிலை பாதுகாப்பு அமைப்பு, கீரணத்தம் நீர்நிலை பாதுகாப்பு அமைப்பு, கானூர் ஏரி பாதுகாப்பு அமைப்பு, செட்டிப்பாளையம் நீர்நிலை பாதுகாப்பு அமைப்பு, மதுக்கரை ஆறு பாதுகாப்பு அமைப்பு, கௌசிகா குளம் பாதுகாப்பு அமைப்பு, வாகை பசுமை பாதுகாப்பு அமைப்பு, அக்ரஹார சாமகுளம் பாதுகாப்பு அமைப்பு, கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு ஆகிய 12 அமைப்புகள் கோவை மாவட்டத்தில் தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதிலும், நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும், மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதிலும், உயிர் வேலி அமைப்பதிலும், விவசாயத்தைப் பாதுகாப்பதிலும் பல ஆண்டுகளாகத் தங்களை ஈடுபடுத்தி வருகின்றன.

இவ்வமைப்புகள் இணைந்து தங்களுடைய சக்திக்கு அப்பாற்பட்டு, அரசால் நிறைவேற்றக்கூடிய 29 கோரிக்கைகளை முன்வைத்து, இவற்றை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து, நிறைவேற்றித் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.

விவசாய நில உச்சவரம்பு

இதுகுறித்து அத்திக்கடவு- கௌசிகா நதி மேம்பாட்டுச் சங்கத் தலைவர் செல்வராஜ், 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறியதாவது:

''சிறு, குறு விவசாய விளைநிலங்களின் உச்சவரம்பை, 5 ஏக்கரில் இருந்து 15 ஏக்கராக உயர்த்தச் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். 25 ஏக்கருக்குள் இருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும், பயிர்களைப் பொறுத்து சொட்டுநீர் உபகரணம், கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்திற்கான மானியத்தை அதிகரிக்க வேண்டும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், விவசாயிகளின் வாரிசுகளுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். நீரில் கரையக்கூடிய உரங்களின் தன்மைகள், இருப்புகள் கண்காணிக்கப்பட்டு அதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும். 100 பேர் கொண்ட பதிவு பெற்ற விவசாயக் குழுக்களுக்கு, அரசு நேரடியாக உதவி வழங்க வேண்டும்.

சிறு, குறு விவசாயிகளுக்குச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்து, தேவைப்படும் துறைகளில் சான்றிதழ்கள் வழங்க வழிவகை செய்ய வேண்டும். தமிழகத்தில் வேளாண் மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அந்தந்த மண்டலங்களில் விளையும் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய அரசு முன்வர வேண்டும்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டம்

தமிழகத்தில் பலமாகவும், வளமாகவும் இயங்கி வரும் கூட்டுறவுச் சங்கங்களில் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் அனைவரையும் உறுப்பினராக்க வேண்டும். உள்ளாட்சிப் பகுதிகளில் இடம் ஒதுக்கி, விவசாயிகள் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிஏபி வாய்க்காலில் இருந்து, சுமார் 16 பஞ்சாயத்து அமைப்புகள் பயன்பெறும் வகையிலும் நிலத்தடி நீரைச் செறிவூட்டவும் பரம்பிக்குளம்- ஆழியாறு வாய்க்காலில் இருந்து கோதவாடி குளத்திற்குத் தண்ணீர் விட வேண்டும்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள ஓடைகளை மாயாற்றுடன் இணைக்க வேண்டும். இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் நீர்த்தேவைக்கும், பாசனத் தேவைக்கும் பலன் கிடைக்கும். மரம் வளர்ப்புக்குச் சொட்டுநீர்ப் பாசன வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட வெள்ளானைப்பட்டி, அரசூர், மோப்பிரிப்பாளையம், கணியூர், கிட்டாம்பாளையம் பகுதிகளையும் சேர்க்க வேண்டும். குளத்துப்பாளையம் அருகில் உள்ள கௌசிகா குளத்தைப் புனரமைக்க வேண்டும்.

சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்குப் பகுதிகள் கடும் வறட்சிக்கு உள்ளாவதால் அங்குள்ள குளம், குட்டைகளுக்கு பிஏபி வாய்க்காலில் இருந்து நிலத்தடி நீர் செறிவூட்டுதலுக்குத் தண்ணீர் விட வேண்டும். கௌசிகா நதி சுமார் 20 உள்ளாட்சி அமைப்புகளின் வழியாகச் செல்கிறது. இப்பகுதிகளில் கழிவுநீரை வடிகட்டி, கௌசிகா நதியின் கரைகளில் மரங்கள் நடவும், கரைகளைப் பலப்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும்''.

இவ்வாறு செல்வராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x