Last Updated : 26 Jan, 2021 12:48 PM

 

Published : 26 Jan 2021 12:48 PM
Last Updated : 26 Jan 2021 12:48 PM

புதுச்சேரியில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் கிரண்பேடி: முதல்வர், சபாநாயகரைத் தவிர்த்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு

புதுச்சேரி

குடியரசு தின விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேசியக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்வில் முதல்வர், சபாநாயகரைத் தவிர்த்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர். ஐஏஎஸ் அதிகாரிகள் தவிர்த்து இதர பிசிஎஸ் அதிகாரிகளும் பங்கேற்கவில்லை.

நாட்டின் 72-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புதுவை அரசு சார்பில் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காலை 8.30 மணிக்கு மைதானத்துக்கு வந்தார். அவரை தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா ஆகியோர் வரவேற்று, விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தேசியக் கொடியை ஏற்றினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையின் ஜீப்பில் சென்று, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

மீண்டும் மேடைக்குத் திரும்பிய ஆளுநர், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்தவர்களில் இருவருக்கு மட்டும் பதக்கம் தந்தார். மீதமுள்ளோருக்கு பதக்கம் வழக்கவில்லை. மாறாக, துறைத் தலைவர்கள் மூலம் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் மட்டும் அறிவிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, காவல்துறையின் ஆயுதப்படை, போக்குவரத்துப் பிரிவு, காவல் படைப் பிரிவு, இந்திய ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறை, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் காவலர் இசைக்குழுவினரின் அணிவகுப்புகளை ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டார்.

கரோனா பரவல் காரணமாக, என்சிசி, என்எஸ்எஸ், சாரண, சாரணியர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு, கலை நிகழ்ச்சிகள், அலங்கார வண்டி அணிவகுப்பு ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

இதில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணியா மற்றும் அரசு செயலர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் முதல்வர், சபாநாயகரைத் தவிர்த்து எம்.பி.க்கள், அமைச்சர்கள், துணை சபாநாயகர், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் புறக்கணித்தனர். குறிப்பாக, பாஜக நியமன எம்எல்ஏக்கள் கூட விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் அரசு செயலர்கள் மட்டுமே பங்கேற்றனர். புதுச்சேரி சிவில் சர்வீஸ் (பிசிஎஸ்) அதிகாரிகளும் பங்கேற்கவில்லை.

இதனால் விழா மேடை அருகே போடப்பட்டிருந்த அனைத்து இருக்கைகளும் அமர்வதற்குக் கூட ஆட்களின்றி காலியாக இருந்தன.

வழக்கமாக குடியரசு தின விழாவைக் காண அதிக அளவில் பார்வையாளர்கள் வருவர். இந்த ஆண்டு கரோனா பரவலையொட்டி சமூக இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பொதுமக்கள் என யாரும் வராததால் பார்வையாளர் அரங்கம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x