காரைக்காலில் குடியரசு தின விழா: தேசியக் கொடி ஏற்றிய ஆட்சியர்
காரைக்காலில் இன்று (ஜன.26) 72-வது குடியரசு தின விழா நடைபெற்றது.
காரைக்கால் கடற்கரைச் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டார். தொடர்ந்து காவல்துறையினர், இந்திய ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத் துறையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பி.ஜனார்த்தனன், கே.சக்திபிரியாள் ஆகியோருக்கு டாக்டர் அம்பேத்கர் நினைவுப் பரிசாக தலா ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.
கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகச் சேவையாற்றிய காரைக்கால் அகில இந்தியப் பண்பலை வானொலி, கரோனா தடுப்புப் பணிகளுக்காக உதவிபுரிந்த தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்குச் சான்றிதழகள் வழங்கி ஆட்சியர் கவுரவித்தார்.
சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், தன்னார்வலர்கள், குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பிடம் பெற்ற அணியினர் உள்ளிட்டோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மண்டலக் காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.
