

சென்னையில் மழை நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்காக கூடுதலாக 2 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகரப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் 28 முதல் நவம்பர் 23-ம் தேதி மாலை 5 மணி வரை 118 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணி வரை 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
உபரி நீர் வெளியேற்றம்
தொடர் மழையால் அனைத்து ஏரிகளிலும் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி, புழல் ஏரியில் 1,500 கன அடி, பூண்டி ஏரியில் 8,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அடையாறு, கூவம், குசஸ்தலை, பக்கிங்ஹாம் கால்வாய்களின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுவாக நாளொன்றுக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்படும். இப்போது மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பை மற்றும் கழிவுகள் அதிகமாக உள்ளதால், நாளொன்றுக்கு 6 ஆயிரத்து 500 டன் அகற்ற வேண்டியுள்ளது. ஏற்கனவே 23 ஆயிரத்து 500 மாநகராட்சி ஊழியர்கள் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிகரிக்கும் குப்பைகளை அகற்றுவதற்காக கூடுதலாக 2 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக 175 குப்பை வாகனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள குடிநீர் வாரிய வாகனங்களின் எண்ணிக்கையும் 82-லிருந்து 117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
15 டன் பிளீச்சிங் பவுடர்
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தூய்மை யாக்குவதற்காக இன்று (நேற்று) மட்டும் 15 டன் பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் கேட்டால் தாராளமாக வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எஸ்.கோகுல இந்திரா, ஆணையர் விக்ரம் கபூர், மேயர் சைதை துரைசாமி, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் சந்திரமோகன் ஆகியோர் உடனிருந்தனர்.