Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

11-வது தேசிய வாக்காளர் தின விழா கொண்டாட்டம்; தூண்டுதலுக்கு ஆளாகாமல் பொறுப்புடன் வாக்களியுங்கள்: வாக்காளர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்

தேர்தலில் எவ்விதத் தூண்டுதலுக்கும் ஆளாகாமல் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தமிழக ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகம் சார்பில், 11-வது தேசிய வாக்காளர் தினம் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு பேசியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் 1950-ம் ஆண்டு ஜன.25-ம் தேதிஉருவாக்கப்பட்டது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜன.25-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கமே புதிய வாக்காளர்களை, குறிப்பாக இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தி அவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய வைத்து அவர்களையும் ஜனநாயகக் கடமை ஆற்ற வைப்பதே ஆகும்.

‘வாக்காளர்களை அதிகாரமிக்கவர்களாக, விழிப்புணர்வு மிக்கவர்களாக, பாதுகாப்பு உள்ளவர்களாக, விஷயம் அறிந்தவர்களாக மாற்று’ என்பதே இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தின மையக் கருத்து.

நியாயமான, நேர்மையான தேர்தல் நடத்துவதற்காக இந்தியதேர்தல் ஆணையம் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி E-Epic (Electronic-Election Photo Identity Card) என்ற புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரானிக் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்களே தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து பிரின்ட்-அவுட் எடுக்கலாம்.

தேர்தலில் வாக்காளர்கள் எந்த வித தூண்டுதலுக்கும் ஆளாகாமல் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு ஆளுநர் பேசினார்.

இந்த விழாவில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வரவேற்றார். தமிழகதலைமைச் செயலாளர் கே.சண்முகம், மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதைத் தொடர்ந்து வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான தமிழ்விளக்கக் கையேடு, தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் ஆகியவற்றை வெளியிட்ட ஆளுநர், தேர்தல் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு கேடயம் வழங்கினார். தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

அதையடுத்து ‘கியாஸ்க்’ எனும் தானியங்கி இயந்திரம் மூலம் எலெக்ட்ரானிக் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பெறும் புதிய முறையை ஆளுநர்தொடங்கிவைத்தார். நிறைவாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நன்றி கூறினார். மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசு அதிகாரிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னை டிஜிபி அலுவலகத்தில் சிறப்பு காவல் துறை இயக்குநர் (நிர்வாகம்) பி.கந்தசாமி தலைமையிலும், தமிழக சட்டப்பேரவைச் செயலர் அலுவலகத்தில் பேரவைச் செயலர் கி.சீனிவாசன் தலைமையிலும் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x