மனநலம் பாதித்தோருக்கு ஈரநெஞ்சம் அமைப்பின் உதவிக் கரம்

மனநலம் பாதித்தோருக்கு ஈரநெஞ்சம் அமைப்பின் உதவிக் கரம்
Updated on
1 min read

மனநலம் பாதித்து சுற்றித் திரிந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து, குணப்படுத்தி அந்த பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளனர் ஈரநெஞ்சம் அமைப்பினர்.

கோவை ரயில் நிலையத்தில் கடந்த மே மாதம் 3-ம் தேதி நள்ளிரவில் ஆதரவற்ற நிலையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் நின்று கொண்டிருந்தார். ரயில்வே போலீஸார் அவரிடம் விசாரித்தபோது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரை மீட்டு கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இரவு தங்கும் விடுதியில் சேர்த்தனர். அங்கு தங்கியிருந்த அவரை, அவரது பெற்றோரிடம் சேர்த்து வைக்கும் முயற்சியில் கோவையை சேர்ந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் முயற்சி எடுத்தனர்.

பெங்களூரில் மனநலம் பாதித்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் ஆர்.வி.எம். மருத்துவமனைக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் அவரை அனுப்பி வைத்தனர்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து விவரத்தை தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் ரதிபிரியா (25) என்பதும், திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த விவசாயி ஜெயக்குமார் என்பவரது மகள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஜெயக்குமாரை ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் தொடர்புகொண்டு அப் பெண்ணை நேற்றுமுன்தினம் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் நிறுவனர் பி.மகேந்திரன் கூறியதாவது:

மனநலம் பாதித்த ரதிப்பிரியா, பெற்றோரின் கட்டுப்பாட்டை மீறி ரயில் மூலமாக கோவை வந்தபோது மீட்கப்பட்டார். அவரது பெற்றோரும் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். தற்போது, சேர்த்து வைத்துள்ளதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் கோவையில் ஆதரவின்றி சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த நிலையில் உஷாதேவி (35) என்பவர் மீட்கப்பட்டு மாநகராட்சி இரவு தங்கும் விடுதியில் சேர்க்கப்பட்டார். அவர் குறித்து விசாரித்தபோது, கணவர் இறந்துவிட்டதும், 10 வயதில் மகன் இருப்பதும் தெரிய வந்தது. மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்டவர். சிகிச்சைக்காக பெங்களூருக்கு அவரை அனுப்பி வைத்தோம். அவர் குணமடைந்ததை அடுத்து அவரது அக்கா வீட்டாரிடன் ஒப்படைத்தோம். நேற்று அவரது மகனை பார்த்தபோது கட்டிப்பிடித்து அழுதார்.

இதேபோல், பெங்களூருவில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த ரீடா (26) என்ற பெண்ணுக்கு சிகிச்சை அளித்து கடந்த 15-ம் தேதி, வேலூர் கமான்பேட்டையில் உள்ள அவரது தந்தை செல்வராஜிடம் ஒப்படைத்தோம். இவரும் 7 வருடங்களுக்கு முன்பு மாயமானவர். இவ்வாறு, மனநலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களது குடும்பத்துடன் இணைத்து வைப்பது ஆத்ம திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in