

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் 27-ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழா, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், கோயில் விதிகளுக்கு உட்பட்டும் வரும் பிப்ரவரி 7-ம் தேதி வரை மிக எளிமையாக நடைபெற உள்ளது.
விழாவில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில், அம்மன் வீதியுலா செல்வதற்கு பதிலாக கோயிலின் உட்பிரகாரத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 23-ம் தேதி பஞ்சமூர்த்திகள் கோயில் உட்பிரகாரத்தில் உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா நேற்று எளிமையாக நடைபெற்றது. தங்க ஆபரணங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேவி கருமாரியம்மன், மலர்கள், வாழை தோரணங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்ட தற்காலிக சிறிய திருத்தேரில் அமர்ந்தார். தொடர்ந்து, திருத்தேர் கோயிலின் உட்பிரகாரத்தில் உலா சென்று, திரும்பியது. இந்த தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி முழக்கமிட்டவாறு, தேவி கருமாரியம்மனை வணங்கினர்.