

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சுற்றுலா நகரமாக விளங்கி வருவதால் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நகரில் உள்ள ஜிகே மண்டபம், ஒத்தவாடைத் தெரு, திருக்குளத் தெரு ஆகியபகுதிகளில் சாலை அமைப்பதற்காக கடந்த 2019-20-ம் நிதியாண்டில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கி 2 கி.மீ. நீளத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட தெருக்களில் ஒத்தவாடை தெருவில் மட்டுமே சாலை அமைக்கப்பட்டுள்ளது, பிற தெருக்களில் சாலை பணிகள் நடைபெறவில்லை என தெரிகிறது. ஆனால், சாலை பணிகள் முடிக்கப்பட்டதாக பேரூராட்சி நிர்வாகத்தில் சான்றளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சாலை அமைக்கும் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அதிகாரிகளை அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டிநிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷமிட்டனர்.
தகவல் அறிந்த மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் வடிவேல்முருகன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அலுவலகம் திறக்கப்பட்டு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும், போலீஸார் முன்னிலையில் மேற்கண்ட குற்றச்சாட்டு குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், முறைகேடு நடைபெறவில்லை, சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக செயல் அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசினாபானு கூறியதாவது: சாலை பணிகளில் முறைகேடு எனக்கூறுவது ஏற்புடையதல்ல. நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கடந்த மாதம் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். தற்போதுபொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பணிகளை உடனடியாக முடிக்கக் கோரி ஒப்பந்ததாரரை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.