Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM

நாம் அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து தேர்தலில் பண விநியோகத்தை தடுப்போம்: மக்கள், அதிகாரிகளுக்கு புதுச்சேரி தலைமைச் செயலர் அழைப்பு

புதுச்சேரி

தேர்தலின் போது பணம் விநியோகிப்பது மிகவும் தவறான அணுகுமுறையாகும். இதனை தடுக்கஅனைவரும் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றுபுதுச்சேரி அரசின் தலைமைச்செயலர் அஸ்வனி குமார் அறிவுறுத்தினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடு முழுவதும் 11-வதுதேசிய வாக்காளர் தினம் நேற்றுகொண்டாடப்பட்டது. புதுவை மாநில தேர்தல் துறை சார்பில்தேசிய வாக்காளர் தினம் கம்பன்கலையரங்கில் நடந்தது. தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் தலைமை வகித்து புதிய வாக்காளர்களை வாழ்த்தி அடையாள அட்டையை வழங்கினார்.

மேலும் சிறந்த வாக்காளர் பதிவு அதிகாரி, வாக்குச்சாவடி நிலைய அலுவலர், இணைப்பு அதிகாரி ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார். விழாவில் வாக்காளர் உறுதிமொழியை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் வாசிக்க, புதிய வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

அதைத் தொடர்ந்து தலைமைச் செயலர் அஸ்வனி குமார் பேசியதாவது:

புதுவையிலும், அண்டை மாநிலத்திலும் தேர்தலின் போது பணம் விநியோகிக்கப்படுகிறது.இது மிகவும் தவறான அணுகுமுறையாகும். இதனை தடுக்க அனைவரும் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டும்.

யாராவது பணம் பட்டுவாடா செய்தால் முதல் முறை வாக்காளர்கள் தேர்தல் ஆணை யத்துக்கு புகார் அளிக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை வாங்க வேண்டியதன் அவசியத்தை உங்களது நண்பர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை வைத்துக் கொண்டு வாக்களிக்காமல் இருந்தால் அது தவறு. தேர்தலின் போது நம்முடைய உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டையை மட்டும் வாங்கி வைத்து கொண்டு குறை சொல்வதில் அர்த்தமில்லை. வாக்களித்தால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். என, நீங்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் சிறப்புரையாற்றினார். மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் வாழ்த்துரை வழங்கினார். இதில் தேர்தல் துறை அதிகாரிகள்,இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டனர். துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் நன்றி கூறினார்.

கடலூரில் வாக்காளர் தினம்

கடலூரில் தேசிய வாக்காளர் தின விழா நேற்று நடைபெற்றது. கடலூர் டவுன் ஹாலில் இருந்து ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நேற்று தொடங்கி வைத்து, அதில் பங்கேற்றார்.

இதையடுத்து 100 வயதை கடந்த வாக்காளர்களான கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த ஏகாம்பரம், திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்த சரஸ்வதி ஆகியோர் வீட்டிற்கு ஆட்சியர் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில்,வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிறப்பான முறையில் பணிபுரிந்த 9 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை, மிதிவண்டி பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் இணையவழி வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்ய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள (e-EPIc) செயலியை ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) கார்த்திக் கேயன், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன்,தேர்தல் வட்டாட் சியர் பாலமுருகன், கடலூர் வட்டாட்சியர் பலராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரத்தில் பேரணி

விழுப்புரத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியை கூடுதல்ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங் தொடங்கிவைத்தார். இப்பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், செஞ்சிலுவை சங்கத்தினர், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் தேர்தல் விழிப்புணர்வு பேச்சு,கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரூபினா, வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x