

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த ஒய்.அரங்கநாதன் நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுகவினர் ஊர்வலமாக சென்று அரங்கநாதன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். திமுக எம்எல்ஏக்கள் எஸ்.அரவிந்த்ரமேஷ், ப.தாயகம்கவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘தாய் மொழியாம் தமிழைக் காக்க இன்னுயிரை ஈந்த கீழப்பழுவூர் சின்னசாமி, விருகை அரங்கநாதன் உள்ளிட்ட மொழிப்போர் ஈகியர்கள் அனைவருக்கும் வீர வணக்கம். பிறமொழி திணிப்பைத் தடுத்து அன்னை மொழியைக் காப்பதே நமது முதல் கடமையாக இருக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘அன்னை தமிழை காத்திட தங்கள் இன்னுயிரையும் ஈந்த மொழிப்போர் தியாகிகளை நன்றியோடு நினைவு கூர்வோம். மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் என்பதை மறக்காமல், நம் தாய்மொழியைக் காத்திடவும், நவீன காலத்தின் தேவைக்கேற்ப அதனை வளர்த்திடவும் உறுதி ஏற்போம்’ என்று கூறியுள்ளார்.