Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM

வருங்கால வைப்பு நிதி கணக்கில் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சரியாக பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை: நிறுவனங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

சென்னை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில், தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் வங்கிக் கணக்கு மற்றும் தனிப்பட்ட விவரங்களை சரியாக பதிவு செய்யவில்லை எனில், தொடர்புடைய நிறுவனங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து மாதம்தோறும் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு இப்பணத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால், ஊழியர்களுக்கு இத்தொகை மிகப் பெரிய சேமிப்பாக உள்ளது.

ஆனால், ஊழியர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் எண், செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு சரியாக அளிப்பது இல்லை. குறிப்பாக, ஏகப்பட்ட பிழைகளுடன் இத்தகவல் அளிக்கப்படுகிறது. இதனால், ஊழியர்களுக்கு ஆன்லைன் மூலம் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருந்து அவசரத்துக்கு பணம் எடுக்க முடியவில்லை. இதுதொடர்பாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

இதுகுறித்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அதிகாரிகளிடம் கேட்டபோது, பணியாளர்களின் முழுமையான மற்றும் சரியான விவரங்களை மட்டுமே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு நிறுவனங்கள் வழங்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்கு, ஆதார் எண் ஆகிய விவரங்களை சரியான முறையில் பதிவு செய்யப்படுவதையும், ஒப்புதல் அளிப்பதையும் நிறுவனங்கள் உறுதி செய்திட வேண்டும்.

அத்துடன், பணியாளர்களுடைய கேஒய்சி விவரங்கள், தொடர்புடைய ஊழியரின் மொபைல் எண்ணுடன் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அதே மொபைல் எண் மற்ற உறுப்பினர்களுக்கோ மற்றும் யுஏஎன்-களுடனோ இணைக்கப்பட வில்லை என்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x