

சென்னை அடையாறு காந்திநகர் 4-வது தெருவில் வசிப்பவர் பிரசாத்(35). இவருக்கு சொந்தமாக லாரிகள் மற்றும் மீன்பிடி படகுகள் உள்ளன. இவரது நண்பர் பிரதாப்(34). இருவரும் சேர்ந்து நீலாங்கரை பாண்டியன் சாலையில் ஒரு சூப்பர் மார்க்கெட்டை நேற்று முன்தினம் தொடங்கினர். நேற்று காலையில் பிரசாத் கடைக்கு வந்து விற்பனையை கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென காரில் வந்த ஒரு கும்பல் பிரசாத்தை கத்தி முனையில் மிரட்டி காரில் கடத்திச் சென்றனர். அப்போது கடையில் இருந்த பணிப்பெண் சாந்தி கூச்சல்போட அவரையும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தை நோக்கி கார் சென்றுள்ளது.
கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் சாலையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் காரின் பதிவு எண்கள் தெளிவாக பதிவாகியுள்ளன.
ஆனால் காரின் முன்பக்கம் ஒரு எண்ணும், பின் பக்கம் வேறொரு எண்ணும் இருந்தது. இரு எண்களையும் ஆய்வு செய்ததில் இரண்டுமே போலியான எண்கள் என்பது தெரியவந்தது.
நேற்று இரவு வரை கடத்தல்காரர்களிடம் இருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வரவில்லை. பிரசாத்தின் செல்போனும் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.