Published : 25 Jan 2021 10:12 PM
Last Updated : 25 Jan 2021 10:12 PM

குடியரசு தினம் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து; கரோனா காலத்தில் கட்சிக்கூட்டம் நடத்தும் முதல்வருக்கு கிராமபை கூட்டங்கள் என்றால் கசக்கிறதா?- ஸ்டாலின் கேள்வி

குடியரசு தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெறித்திருக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், கரோனா காலத்தில் கட்சிக்கூட்டம் நடத்தும் முதல்வருக்கு கிராமபை கூட்டங்கள் என்றால் கசக்கிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை:

கரோனா காலத்தில் கட்சிக் கூட்டங்களை நடத்தி- பிரச்சாரத்தில் ஈடுபடும் முதல்வர் பழனிசாமிக்கு கிராம சபைக் கூட்டங்கள் என்றால் கசக்கிறது. திமுக நடத்திய கிராம சபைக் கூட்டங்களைப் பார்த்து அதற்கு கூடும் மக்களைப் பார்த்து முதல்வரும், அமைச்சர்களும் மிரண்டு போயிருக்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. கிராம ராஜ்யத்தின் உயிர்நாடியாகத் திகழும் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்குக் கூட வக்கற்ற அதிமுக அரசு தமிழகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சாபக்கேடு.

உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கே உச்சநீதிமன்றம் வரை போராட்டம் நடத்த விட்டு பிறகு வேறுவழியின்றி கிராமப்புற ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தியது இந்த அரசு. திமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் ஊராட்சி மன்றங்களில் பெரும்பான்மையாக பொறுப்பிற்கு வந்து விட்டதால் அதிமுக அஞ்சி நடுங்குகிறது.

அதிமுக அரசின் கொள்ளைகள்-பிளீச்சிங் பவுடர் வாங்குவதில் துவங்கி, குடிநீர் இணைப்புகள் கொடுப்பது வரை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிகழ்த்தியுள்ள ஊழல் லீலைகள் திமுக தெரிந்து விட்டதே என முதல்வர் பழனிசாமியும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் ரொம்பவுமே பதற்றப்படுகிறார்கள்.

தனது உறவினர்கள் பெயரில் கம்பெனி வைத்து- பினாமி கம்பெனிகள் மூலம் உள்ளாட்சித்துறையில் பில் போட்டு - டெண்டர் விட்டு சுரண்டிய அமைச்சரோ - தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் கையில் ஊழல் ஆதாரங்கள் சிக்கி விட்டதே என்று கலங்கி நிற்கின்றனர். அதனால் மக்களுக்கான திட்டங்கள் பற்றி விவாதிக்கும் - கிராம வளர்ச்சி குறித்து விவாதிக்கும் மிக முக்கியமான ஜனநாயக மன்றமாம் கிராம சபைக் கூட்டங்களை நடத்த விடாமல் தொடர்ந்து தடை விதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தடை வருகின்ற மே மாதம் வரைதான், திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகமெங்கும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடக்கத்தான் போகிறது. அதில் மக்கள் நலத்திட்டங்கள் பற்றிய விவாதமும் அதிமுக ஆட்சியின் உள்ளாட்சித்துறை ஊழல்களும் முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர் கூட்டு வைத்து அடித்த கொள்ளைகளும் மக்கள் மன்றத்திற்கு வரத்தான் போகிறது.

“சீப்பை ஒழித்து விட்டால் திருமணம் நின்று விடும்” என்ற முதல்வர் பழனிசாமியின் கனவும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் கனவும் நிச்சயம் மக்கள் சக்தியால் கலைக்கப்பட தான் போகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x