

புதுவை நகரப் பகுதியில் பல சாலைகள், பாரதி பூங்காவை மூடி மக்கள் வரத் தடை விதித்து மத்தியப் படை, போலீஸ் பாதுகாப்பு விதித்துவிட்டு குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை, பாரதி பூங்கா, சட்டப்பேரவை எனப் பல பகுதிகளில் பல லட்சம் ரூபாய் செலவில் அலங்கார மின்விளக்குகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நாளை (26ம் தேதி) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. புதுவை உப்பளம் மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேசியக் கொடியேற்றுகிறார்.
விழாவில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர். விழாவையொட்டி காவல்துறையினரின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வழக்கமாக இடம்பெறும் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பல்வேறு துறைகளின் அலங்கார வண்டி அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உப்பளம் மைதானத்தில் போலீஸார் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கு ஏடிஜிபி ஆனந்தமோகன் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அணிவகுப்பு ஒத்திகையின்போது விழாவில் தீவிரவாதிகள் முக்கியப் பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றால் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது.
இதேபோல் உப்பளம் மைதானத்தில் குடியரசு தின விழா முடிந்ததும் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றுவார். அங்கும் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி புதுவை முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களுக்குத் தடைவிதித்துப் பல லட்சம் ரூபாய் செலவில் ஒளிரும் விளக்குகள்
குடியரசு தினத்தையொட்டி, புதுவை ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை வளாகம், தலைமை செயலகம் உள்ளிட்ட கட்டிடங்கள், பாரதி பூங்கா ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்ததன் எதிரொலியாகக் கடந்த 7-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகத்தை சுற்றிலும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டது. பாரதி பூங்கா காலவரையின்றி பூட்டப்பட்டுள்ளது. அத்துடன் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆளுநர் மாளிகையைச் சுற்றிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 நாட்களாக இப்பகுதியில் முதல்வர், அமைச்சர்கூடச் செல்ல முடியாத சூழலில் ஆளுநர் மாளிகை, பாரதி பூங்கா, அப்பகுதியை சுற்றி பகுதிகள், சட்டப்பேரவை உள்ளிடட் பகுதிகள் பல லட்சத்தில் அலங்கா மின்விளக்குகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுபற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, ''கடந்த முறை சுதந்திர தினம் வந்தபோது ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும் மின்விளக்குகள் போடப்பட்டன. தற்போது 144 தடை உத்தரவு உள்ளது. எனினும் வழக்கம்போல் மின்விளக்குகள் போட்டு வருகிறோம். ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமைச்செயலகம் மற்றும் பாரதி பூங்கா ஆகியவற்றுக்குத் தலா ரூ.3 லட்சம் என மின்விளக்குகளுக்கு ரூ. 15 லட்சம் வரை செலவாகும்" என்று குறிப்பிட்டனர்.