முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கு; 15 ஆண்டுகளாகத் தேடப்படும் பவாரியா கொள்ளையன்: 3 வாரத்தில் பிடிக்க உயர் நீதிமன்றம் கெடு

முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கு; 15 ஆண்டுகளாகத் தேடப்படும் பவாரியா கொள்ளையன்: 3 வாரத்தில் பிடிக்க உயர் நீதிமன்றம் கெடு
Updated on
2 min read

முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் தொடர்புடைய வட மாநிலத்தில் பதுங்கியுள்ள பவாரியா கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஜெயில்தர் சிங்கைக் கைது செய்ய மூன்று வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர் கே.சுதர்சனம். அதிமுகவைச் சேர்ந்த அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக சிறிது காலம் இருந்தார்.

சுதர்சனத்தின் வீடு பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் இருந்தது. கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு 6 பேர் கொண்ட கும்பல் புகுந்து, வீட்டின் கதவை உடைத்து சுதர்சனத்தின் இளைய மகன் சதீஷைத் தாக்கிக் கட்டிப்போட்டது. மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த சுதர்சனம், கொள்ளையர்களைப் பார்த்து சப்தம் போட, அந்தக் கும்பல் சுதர்சனத்தைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. பின்னர், துப்பாக்கி முனையில் 50 சவரன் தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றது.

தனது கட்சி சட்டப்பேரவை உறுப்பினரே கொல்லப்பட்டது குறித்து அறிந்த முதல்வர் ஜெயலலிதா கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். குற்றவாளிகளைப் பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்தத் தனிப்படை மிகத் தீவிரமாகச் செயல்பட்டு அடுத்த மாதத்திலேயே கொள்ளையர்கள் யார் எனக் கண்டுபிடித்தது. அதில் முக்கியக் குற்றவாளியை பிப்ரவரி 1 அன்று கைது செய்தது. பின்னர் தொடர் துப்பு துலக்கி மார்ச் மாதத்தில் ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

செப்டம்பரில் முக்கியக் குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். ராஜஸ்தானில் பவாரியா கொள்ளையர்களை ஜாங்கிட் குழுவினர் பிடித்த சாகசக் கதை பின்னர் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமாக வெளிவந்தது.

தனிப்படை போலீஸார், 32 பேர் மீது வழக்குப் பதிந்ததில் 23 பேர் தலைமறைவாகிவிடவே ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், பவாரியா, அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேரை மட்டுமே பிடித்துக் கைது செய்தனர். இருவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் அது ஆயுள் தண்டனையாக உயர் நீதிமன்றத்தால் குறைக்கப்பட்டது. 2 தூக்கு தண்டனைக் கைதிகளில் ஒருவரான இதில் ஓம்பிரகாஷ் பவாரியா சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டார். அவரது சகோதரர் ஜெகதீஷ் 2005-ம் ஆண்டிலிருந்து விசாரணைக் கைதியாக புழல் சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெகதீஷ் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு முடிக்கப்படாமல் இருப்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநிலத் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயில்தர் சிங்குக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணை தடைப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் 3 வாரம் அவகாசம் வழங்கினால் அவரைக் கைது செய்வது தொடர்பாகவோ, மீதமுள்ளவர்களை வைத்து வழக்கை முடித்து வைப்பது தொடர்பாகவோ காவல்துறையின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என எடுத்துரைத்தார்.

காணொலிக் காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்த திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், வட மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி ஜெயில்தர் சிங்கைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்

அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மூன்று வாரத்திற்குள் ஜெயில்தர் சிங்கைக் கைது செய்யும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டதோடு, ஜெகதீஷின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in