Published : 02 Nov 2015 08:09 AM
Last Updated : 02 Nov 2015 08:09 AM

போனஸ் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது: தொழிற்சங்கங்கள் கருத்து

தமிழக அரசு அறிவித்துள்ள போனஸ் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுத்துறை ஊழியர் களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எஸ்.எஸ்.சுப்பிரமணியன் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு): கடந்த ஓராண்டாக மின் உற்பத்தி, விநியோக தொடரமைப்பு ஆகியவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் போனஸ் உச்சவரம்பை கணக்கில்கொண்டு தமிழக அரசு போனஸ் அறிவிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. மின்வாரிய பல்வேறு பிரிவுகளில் 7 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், அரசு வெறும் 52 பேர்தான் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர் எனக் கூறி ரூ.2 ஆயிரம் மட்டுமே போனஸ் வழங்குகிறது. மொத்தத்தில் அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.

கி.நடராஜன் (தொமுச பொருளாளர்): போக்குவரத்து துறையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தொழிற்சங்கங்களுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. ஒரு சதவீதம்கூட உயர்வு இல்லாதது, தொழிலாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அகவிலைப்படி, ஊதிய ஒப்பந்த நிலுவை தொகை உள்ளிட்டவை வழங்கக் கோரி தொமுச சார்பில் தமிழகம் முழுவதும் 296 பணிமனைகளிலும் திங்கட்கிழமை (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

ஜெ.லட்சுமணன் (ஏஐடியுசி பொதுச்செயலாளர்): கடந்த 10 ஆண்டுகளாக 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப போக்குவரத்து ஊழியர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க பேச்சுவார்த்தை நடத்தி அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், அரசு தன்னிச்சையாக முடிவெடித்து அறிவிப்பு செய்துள்ளது தொழிற்சங்கங்களின் உரிமையை பறிக்கும் விதத்தில் இருக்கிறது. மேலும், சேமநல ஓட்டுநர், நடத்துநர் உட்பட சுமார் 47 ஆயிரம் பேருக்கு போனஸ் பற்றி அறிவிப்பில் தெளிவாக இல்லாமல் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழக அரசின் போனஸ் அறிவிப்பால் தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x