

குடியரசு தின விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழா நடைபெறும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். விளையாட்டரங்கில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தேசியக் கொடியேற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். கரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தனிமனித இடைவெளியுடன் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதைப்போல் களியக்காவிளை முதல் காவல்கிணறு வரையிலான குமரி சோதனைச் சாவடிகளில் தீவிரச் சோதனை நடத்திய பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. நாகர்கோவில், கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் மற்றும் பார்சல்கள் சோதனை செய்த பின்னரே அனுப்பப்படுகின்றன. ரயில் நிலையம், பேருந்து நிலையம், மற்றும் கன்னியாகுமரி சுற்றுலா மையங்களில் மெடல் டிடெக்டர் மூலம் போலீஸார் சோதனை மேற்கொள்கின்றனர்.
கன்னியாகுமரி கடல் வழியாகத் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் சஜாக் ஆபரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகை மற்றும் கண்காணிப்பில் மெரைன் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இன்று தொடங்கிய இந்த ஒத்திகை 29-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது. அதிநவீனப் படகுகளில் சென்ற போலீஸார், குமரி மாவட்டம் தவிர வெளியூர்களில் இருந்து வந்த படகுகளின் ஆவணங்கள், உடமைகளைச் சோதனை செய்தனர். இதைப் போல் கடலோரச் சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இரவு, பகலாக வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.